
பூமியில் "உயிர்" தோன்றியதற்கு எரிமலைகள் மற்றும் மின்னல்கள் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் சான்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உயிர் தோற்றத்திற்கு முக்கியமான "பொறி"யை அவைதான் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள்.
எரிமலை என்பது பூமியின் மேற்பரப்பில் காலியான உள்ளே ஒரு திறப்பு இருக்கும் மலை, இதன் மூலம் உருகிய பாறைகள், வாயுக்கள் மற்றும் சாம்பல் வெளியேறுகின்றன. நிலத்தடியில் இருக்கும்போது இந்த கலவை மாக்மா என்றும், வெடிக்கும்போது "லாவா" என்றும், அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டில் எரிமலை வெடிக்கும்போது ஏற்படும் சூழல் அந்தப்பகுதியில் வானிலை மற்றும் தட்பவெப்பநிலையில் தீவிரமான மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.
வல்கேனோ (valcano) என்ற ஆங்கில வார்த்தை, ரோமன் நெருப்புக் கடவுளான வல்கன் என்பதிலிருந்து உருவானது. பூமியின் கண்டத் தட்டுகள் சந்திக்கும் இடங்களில்தான் எரிமலைகள் அமைந்திருக்கும். பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள இடங்களில்தான் உலகின் 75 சதவீத எரிமலைகள் உள்ளன. இதை "பசிபிக் நெருப்பு வளையம்"என்று அழைக்கிறார்கள். இங்கேதான் உலகின் 90 சதவீத நிலை நடுக்கங்கள் நிகழ்கின்றன.
பூமியின் உள்ளே அதிக வெப்பமுள்ள பாறைகள் காணப்படும் இடங்களிலும் எரிமலைகள் அமைந்திருக்கும். இந்த இடங்களை "ஹாட் ஸ்பாட்ஸ்" என்று அழைப்பர். பூமியின் பல இடங்களில் இந்த Hot spots அமைந்துள்ளன. அதில் முக்கியமானது ஹவாய் தீவுகள்.
பூமியின் மையப் பகுதியில் உள்ள நெருப்புக் குழம்பு கொதித்து, " மாக்மா சேம்பர்ஸ்" எனப்படும் முரட்டு நெருப்புக் குமிழ்களாக உருவாகும்.சுற்றி இருக்கும் பாறைகளைவிட இந்தக் குமிழ் லேசாக இருப்பதால், கிடைக்கும் பிளவுகள் மற்றும் பலவீனமான பாறைகள் வழியாக ஊடுருவி மேலே வந்து எரிமலையாக வெடிக்கும்.
பூமிக்குள் இருக்கும்வரை உருகிய பாறையின் பெயர் " மாக்மா " எனப்படும். எரிமலை வெடித்து அது வெளியே வந்த பின் "லாவா" என்று அழைக்கப்படுகிறது. எரிமலை வெடிக்கும்போது சீறிப்பாயும் சாம்பல், பூமியிலிருந்து 25 கிமீ உயரம் வரை வானத்தில் பயணிக்கும். எரிமலை யிலிருந்து நீராவி, கார்பன் டை ஆக்சைடு, கந்தக டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் வெளியேறும்.
பல எரிமலைகள் பல நூறு ஆண்டுகளாக வெடித்து சிதறாமல் அமைதியாக உள்ளன. இவைகளை அணைந்த எரிமலைகள் (Extinct) என்கிறார்கள். சில எரிமலைகள் எப்போதாவது வெடிக்கும். இவைகளை உறங்கும் எரிமலைகள் (Dormant) என்கிறார்கள். சில எரிமலைகள் அடிக்கடி வெடித்து பயமுறுத்தும். இவைகளை இயங்கும் எரிமலைகள் (Active) என்கிறார்கள். இப்படி வெடிக்கும் ஆபத்துள்ள எரிமலைகள் உலகில் ஆயிரக்கணக்கில் உள்ளன.
எரிமலைகள் வெடிக்கும்போது சில நேரங்களில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்படும். எரிமலை என்றாலே, அது கூம்பு வடிவில் இருக்கும் என்றே அனைவரும் எண்ணுகிறோம். ஆனால் அது எரிமலையில் ஒரு வகைதான். அகன்ற பீடபூமி, சிறு பள்ளம், டூம் வடிவமைப்பு எரிமலைகளும் உள்ளன. கடலின் ஆழமான பகுதியில் கூட எரிமலைகள் உள்ளன.
உலகின் பெரிய இயங்கும் எரிமலை, ஹவாய் தீவுகள் பகுதியில் உள்ள "மோனா லோவா (Mauna loa). கடலுக்கடியில் புதைந்துள்ள இதன் அடிப்பகுதி மாலையுடன் சேர்ந்தால் அது இமயமலையை விட பெரியதாக இருக்கும்.70 கிமீ நீளமும்,40 கிமீ அகலமும் கொண்ட இது ஹவாய் தீவுகள் பகுதியில் அமைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் உயரமான மலையான ஃபுஜி ஒரு உறங்கும் எரிமலை ஆகும்.
பொதுவாக எரிமலைகள் உயரமாக வளர பல்லாண்டு காலம் ஆகும். ஆனால் சில எரிமலைகள் வேகமாக ஒரே நாளில் கூட வளரும். மெக்சிகோவில் 1943 ம்ஆண்டு பிப்ரவரி 20 ல் தோன்றிய "பேரிக்யூட்டின்" என்ற எரிமலை ஒரே வாரத்தில் 5 அடுக்குமாடி உயரம் வளர்ந்தது. ஒரு வருட முடிவில் 336 மீட்டர் வளர்ந்தது.1952 ல் அதன் வளர்ச்சி நின்றபோது அதன் உயரம் 424 மீ இருந்தது.