
மாசு ஏற்படுவதை முழுமையாக அகற்றிவிட முடியாது. ஆனால் மாசு ஏற்படாமல் தவிர்க்க முடியும். அனைத்து உயிர்களுமே சுத்தமான காற்றைத்தான் சுவாசிக்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், பாதுகாப்பும் சுகாதாரமான சுற்றுச்சூழலின் அடிப்படையாக விளங்குகிறது. ஒவ்வொரு தனி நபரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கு கொள்ளும்போது, உலகளவில் சிறந்த சூழ்நிலையை உருவாக்க முடியும். பூமியில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆக்ஸிஜன் அவசியமாக தேவைப் படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு தனி மனிதர்கள் மேற்கொள்ள வேண்டியவை
1.ஒவ்வொரு தனி மனிதரும் சுற்றுச்சூழல் பற்றியும் அது மாசுபாடு அடைதல் பற்றியும் அறிந்து கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
2.பாலிதீன் பைகள் மற்றும் குப்பைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய முன்மாதிரி நடவடிக்கைகளாகும்
3.பல் துவங்குவதற்கு ஆரம்பிக்கும் போதே வீட்டில் உள்ள தண்ணீர் குழாயைத் திறந்து விட்டு அச்செயல் முடியும் வரை தண்ணீர் வீணாகிக்கொண்டே இருக்கும். இச்செயல் தவிர்க்கப்படுவது சிறந்ததாகும்.
4.மின்சாரம் தேவைப்படும்போது பயன்படுத்தினால் அனல்மின் நிலையத்தினால் ஏற்படக்கூடிய மாசுபடுதல் தவிர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மின்சார செலவும் குறைகின்றது.
5.பழைய வாகனங்கள் சரியாக பராமரிக்கப் படாதிருந்தால் வாகனம் ஒட்டப்படும்போது அதிக புகை ஏற்பட்டு வளிமண்டலம் மாசு அடைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
6.அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யப்படும்போது பெரிய அளவு போக்குவரத்து சாதனம் பயன்படுத்தப் படுவது சிறந்ததாகும். ஒன்று எரிபொருள் சேமிக்கப் படுகிறது. இரண்டாவதாக, வாகனம் வெளியிடும் புகையினால் வளிமண்டலத்தில் மாசு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறது. குறைந்த தூரம் செல்பவர்கள் நடைப் பயணமாக அல்லது சைக்கிள் பயணமாக சென்றால் இயற்கை வளம்(எரிபொருள்) குறைவது தடுக்கப்படுகிறது.
7.ஒவ்வொரு வீடுகளிலும் தோட்டம் அமைப்பதனால் வீட்டிலிருந்து வெளியேற்றப் படும் தண்ணீர் தோட்டத்திற்கு பயன்படுத்தும் போது நீரினால் ஏற்படக்கூடிய மாசு தவிர்க்கப் படுகின்றது. குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளும் கிடைக்கப் பெறுகின்றன. கொசுவின் தொல்லையும் குறைகின்றது.
8.பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்து வதால் மண்ணும், காற்றும் மாசு படுகிறது. மற்றும் உயிரினங்களின் உடல் நலனுக்குக் கேடு ஏற்படுகின்றது.
9.தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் நிறுவப் படாமலிருக்க வேண்டும். தொழிற்சாலைகளில் ஏற்படும் கழிவுகள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஒரு சில கழிவுகள் மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தப் படுமாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.
10.புகைப்பிடிக்கும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். புகைப் பிடித்தல் இல்லாமல் இருப்பது உடல் நலத்திற்கு உகந்ததாகவும் சுற்றுச்சூழலுக்கு சாதகமாகவும், இருக்கும்.
11.பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் எரிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஏனெனில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப் படுவதால் காசநோய், புற்றுநோய், தோல் வியாதி,கண் எரிச்சல் போன்றவை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.
12.விவசாய நடவடிக்கைகளுக்கு முடிந்த வரையில் இயற்கை வளங்களையே பயன்படுத்தப்பட வேண்டும்.
13. சூரிய சக்தியினால் பயன் படுத்தக்கூடிய சாதனங்களை இயன்ற வரையில் பயன்படுத்த வேண்டும்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கு இணங்க ஒவ்வொரு தனி நபரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் செலுத்தினால் உலகளவில் உயிரினங்களின் வாழ்விற்கு உகந்ததாகவும், உறுதுணை யாகவும் இருக்கும்.