"ஜுராசிக் பார்க்" படம் பார்த்ததிலிருந்து, பூமியின் பழைய ஓனர்கள் டைனோசர்கள் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், டைனோசர்கள் உருளாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பூமியை சில பயங்கரமான அரக்கர்கள் ஆட்சி செய்தன என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்த காலகட்டத்தை "பெர்மியன் காலம்" (Permian Period) என்று அழைக்கிறார்கள். சுமார் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமாகவும், ஆபத்தான தாகவும் இருந்தது. வாருங்கள் இந்த பதிவில் அந்த 'மான்ஸ்டர்கள்' வாழ்ந்த உலகத்தை நோக்கி கொஞ்சம் பயணம் செய்வோம்.
பாஞ்சியா (Pangea)!
இன்று நாம் பார்க்கும் ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற தனித்தனி கண்டங்கள் அப்போது இல்லை. இவை அனைத்தும் ஒன்றிணைந்து "பாஞ்சியா" என்ற ஒரே ஒரு மாபெரும் சூப்பர் கண்டமாக இருந்தது. இந்தக் கண்டத்தின் நடுப்பகுதி கடுமையான பாலைவன மாகவும், வெப்பம் மிகுந்ததாகவும் இருந்தது. கரையோரங்களில் மட்டுமே மழை மற்றும் காடுகள் இருந்தன. இந்த விசித்திரமான சூழலில்தான் சில விநோத விலங்குகள் வாழ்ந்து வந்தன.
உண்மையான அரக்கர்கள்!
டைனோசர்களுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகளில் மிகவும் பயங்கரமானது கோர்கோனாப்சிட் (Gorgonopsid). குறிப்பாக ஐனோஸ்ட்ரான்சிவியா (Inostrancevia) என்ற விலங்குதான் அன்றைய டாப் ரவுடி. இது பார்ப்பதற்கு ஒரு ராட்சத நாய் போலவும், ஊர்வன போலவும் கலந்த கலவையாக இருக்கும். இதன் வாயில் கத்தி போன்ற கூர்மையான இரண்டு கோரைப்பற்கள் இருந்தன. இவைதான் பூமியின் முதல் "சேபர் டூத்" விலங்குகள். இவை மிகவும் வேகமாக ஓடி, ஸ்கூட்டோசரஸ் போன்ற தடிமனான தோல் கொண்ட விலங்குகளைக் கூட எளிதாக வேட்டையாடின.
கவச விலங்கு!
கோர்கோனாப்சிட்களுக்கு உணவாக இருந்த முக்கிய விலங்கு ஸ்கூட்டோசரஸ். இது ஒரு தாவர உண்ணி. பார்ப்பதற்குத் தடிமனாக, எருமை மாடு அளவில் இருக்கும். இதன் தோல் மிகவும் கடினமானது, கவசம் போல இருக்கும். இவர்கள் கூட்டமாக வாழ்ந்தார்கள். தண்ணீர் குறைவாக உள்ள பாலைவனப் பகுதிகளிலும் இவர்களால் வாழ முடிந்தது.
பலரும் முதுகில் விசிறி போன்ற அமைப்பைக் கொண்ட டிமெட்ரோடானை (Dimetrodon) டைனோசர் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது டைனோசர் அல்ல, அது ஒரு சினேப்சிட்" (Synapsid). அதாவது பாலூட்டிகளின் முன்னோடி. இது சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தித் தன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த அந்த விசிறியைப் பயன்படுத்தியது.
மாபெரும் அழிவு!
இந்த அரக்கர்களின் ஆட்சி எப்படி முடிவுக்கு வந்தது என்றால், சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் இதுவரை நடந்திராத மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. இன்றைய சைபீரியாவில் இருந்த எரிமலைகள் வெடித்துச் சிதறின. அது சாதாரணமாக வெடிக்கவில்லை, பல லட்சம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து லாவாவைக் கக்கிக் கொண்டே இருந்தது. இதனால் வளிமண்டலம் முழுவதும் சாம்பல் மற்றும் நச்சு வாயுக்களால் நிரம்பியது. பூமி சூடானது, கடல்கள் அமிலமாக மாறின.
இந்த விபரீதத்தால் பூமியில் இருந்த 90% முதல் 95% உயிரினங்கள் அழிந்து போயின. கோர்கோனாப்சிட்ஸ், ஸ்கூட்டோசரஸ் போன்ற அனைத்தும் துடைத் தெறியப்பட்டன. இதை The Great Dying என்று அழைக்கிறார்கள்.
இந்த மாபெரும் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்த மிகச் சிறிய 5% உயிரினங்களில் இருந்துதான், பிற்காலத்தில் டைனோசர்கள் உருவாயின. மேலும், தப்பிப் பிழைத்த சில சினேப்சிட்கள்தான் பரிணாம வளர்ச்சியடைந்து பாலூட்டிகளாகவும், இறுதியில் மனிதர்களாகவும் மாறின. அதாவது, அந்தப் பேரழிவில் நம் முன்னோடிகள் மட்டும் தப்பிக்கவில்லை என்றால், இன்று இந்தக் பதிவை வாசிக்க நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள்.
டைனோசர்களுக்கு முந்தைய உலகம் ஒரு நரகம் போல இருந்தாலும், அதுதான் மனித குலத்தின் விதை போடப்பட்ட காலம் என்பது மறுக்க முடியாத உண்மை.