தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமி பேரழிவை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாது. 20 வருடங்களை கடந்தும், இச்சமயத்திலும் கூட சுனாமி என்றவுடன் நம் கண் முன் வருவது லட்சக்கணக்கில் நாம் பறிகொடுத்த உயிர்களே. ஆனால் அத்தகைய கொடூரமான பாதிப்பிலும் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படாத பகுதி என்றால் அது பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை பகுதிதான். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து இப்பகுதிகள் தப்பித்ததற்கு முக்கிய காரணம் என்ன?அலையாத்தி காடுகளே!
அலையாத்தி காடுகள் என்றால் என்ன?
அலையாத்தி காடுகள் என்பது நிலமும் மண்ணும் சேரும் இடங்களில் உருவாகும் அதிகமான சேற்றுப் பகுதியில் காணப்படும் காடுகள். புவியியல் அமைப்பில் மிகவும் ஈரப்பதமான பகுதி என்றால் அது இத்தகைய அலையாத்தி காடுகள் தான். இந்த அலையாத்தி காடுகள் கடல் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிலத்தை காப்பதால் இவற்றிற்கு அலையாத்தி காடுகள் என்ற பெயர் உருவானது. பொதுவாக அலையாத்தி காடுகள் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
நிலத்திற்கும் கடலுக்கும் இடையிலான சதுப்பு நிலப் பகுதிகளில் செழித்து வளரும் அலையாத்தி காடுகள் புயல், சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களின் போது கடற்கரையோர குடியிருப்புகளை காக்கும் அரணாகவும் மக்களை காக்கும் மிகப்பெரிய பாதுகாவலனாகவும் விளங்குகின்றன. மேலும் தொடர்ந்து மோதப்படும் அலைகளால் மண்ணரிப்பு ஏற்படுவதில் இருந்து தடுப்பதிலும் அலையாத்தி காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
அலையாத்தி காடுகளில் இருக்கும் மிகப்பெரிய சவால்கள் :
நிலையற்ற அடித்தளம், அளவுக்கு அதிகமான உப்பு தன்மை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற கடுமையான சூழலை எதிர்த்து அலையாத்தி காடுகள் வளர்கின்றன. இவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்கள், பாதுகாப்பான கடலோர பகுதிகள், நதியின் முகத்துவாரங்களில் அதிகமாக காணப்படுகின்றன. சில வகையான அலையாத்தி தாவரங்கள் உப்பு சுரப்பிகளை பெற்றுள்ளன. இதன் மூலம் அதிகப்படியான உப்பை தண்டு மற்றும் இலைகள் மூலம் வெளியேற்றும் தன்மை உடையவை. நிலையற்ற அடித்தளத்தில் இவை வளர்வதால் ஊன்றி நிற்பதற்கு முட்டு வேர்களை அலையாத்தி காடுகள் பெற்றுள்ளன.
அலையாத்தி காடுகள் நிலப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களை விட அதிகமான கார்பன் டை ஆக்சைடு உள்வாங்கும் தன்மை உடையவை. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்கள் பார்ப்பதற்கு வரிசையாக இருக்கும். இந்தக் காடுகளில் 30 வகைகள் உள்ளன. வெண்கடல், கருங்குண்டல், சிறு கண்டல், நெட்ரை, சுரப்புன்னை, போன்ற வகையான மரங்கள் இங்கு அதிகம் காணப்படும். மேலும் வேர்கள் மூலம் சுவாசிக்கும் அவி, சென்னியா, மெனரனா போன்ற தாவரங்கள் அலையாத்தி காடுகளில் அதிகமாக வளர்கின்றன. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை உடையவை. இந்த பூக்கள் மிகுந்த வாசம் உடையவை. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரையான காலகட்டத்தில் அதிகமான பறவைகள் அலையாத்தி காடுகளுக்கு வருகை தருகின்றன.
அலையாத்தி காடுகள் இயற்கை பேரிடரில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற பலன்களும் மிக அதிகமாகவே தருகின்றன. அலையாத்தி காடுகள் உள்ள பகுதிகளில் மீன்வளம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மிகவும் அதிகமான கடல் வளங்களான சிப்பி, நண்டு, மீன் போன்ற பல வகையான உயிரினங்களின் உறைவிடமாகவும் இனப்பெருக்கம் நடைபெறும் களமாகவும் அலையாத்தி காடுகள் விளங்குகின்றன. மேலும் அலையாத்திக் காடுகள் 100க்கும் மேற்பட்ட மரங்கள் 10க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு அடைக்கலமாக உள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் உள்ளது. இது பிச்சாவரம் அலையாத்தி காடுகளை விட 10 மடங்கு பெரியது. ஆறுகள் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் என அழைக்கப்படுகிறது. இந்த லகூன் பகுதி சுற்றுலா பயணிகள் விரும்பும் மிகச் சிறந்த கடல் பயண அனுபவத்தை தரும் மிகச் சிறந்த சுற்றுலாவாகும். முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் சுற்றுலா பயணிகள் அதிக வருகை தரக்கூடிய ஒரு சுற்றுலாத்தலமாகவும் அமைந்துள்ளது.
பெருகிவரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, இறால் பண்ணைகள் அமைத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் அலையாத்தி காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. கடல் அலைகளில் இருந்து நம்மை காக்கும் கடவுளாய் விளங்கும் அலையாத்தி காடுகளை அழிப்பதால் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அழிவுகளை சந்திக்க நேரிடலாம் என்பதை மனிதர்களாகிய நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய மிகப்பெரிய பொக்கிஷங்களில் கடல் வளங்களான இந்த அலையாத்தி காடுகளும் ஒன்று.