
வீட்டில் தோட்டம் அமைக்கும் போது அதில் காய்கறிச்செடிகள், பழச்செடிகள், பூச்செடிகள் போன்றவை செழிப்புடன் வளர்ந்து வர நாம் சரியான கவனிப்பு செலுத்த வேண்டும். இதோ அதற்கு பயன்படும் குறிப்புகள்...
1. தக்காளிச்செடி வளர்ந்து வரும் சமயத்தில், அதற்கு பக்கத்தில் கம்புகள் ஊன்றிக் கொடுக்க வேண்டும்.
2. வெயில் காலத்தில் மிக அதிகாலையில் செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மாலையில் வெயில் நன்றாக தாழ்ந்த பின்னரே நீர் விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.
3. புடவலங்காய் பந்தலுக்கு தரை மட்டத்திலிருந்து இரண்டு மீட்டராவது உயரம் இருக்க வேண்டும்.
4. ரோஜாச் செடிகளுக்கு வாழைப் பழத்தோலை நறுக்கிப் போட்டால் செடியும் நன்றாக வளரும், செழிப்பான பூக்களும் பூக்கும்.
5. மிளகாய்ச் செடியில் பூக்கள் பூத்திருக்கும் போது, சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த தண்ணீரை செடியில் தெளித்தால் வண்டுகள் பூவை மொய்த்து விடும். அத்தனை பூக்களும் காயாகி விடும்.
6. செடிகளைச் சுற்றி ஆழமாக குழி வெட்டி அதில் வீடு பெருக்கும் போது சேரும் காய்கறித் தோல்கள், பேப்பர் துண்டுகள், மரத்திலிருந்து உதிரும் இலைகள் போன்றவற்றை இந்தக்குழியில் நிரப்பி மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். அவை மக்கி செடிகளுக்கு சிறந்த உரமாக மாறிவிடும். இதன் ஈரத்தை காத்துக்கொள்ளும் தன்மை காரணமாக கடும் கோடையிலும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு தண்ணீர் விட்டால் போதும்.
7. முருங்கையை வீட்டுக் கொல்லைப் புறத்தில் வளர்ப்பதை விட வீட்டு வாசல் பக்கத்தில் வளர்த்தால் முருங்கை நன்றாக காய்க்கும். சாலைப்போக்கு வரத்தால் ஏற்படும் நிலஅதிர்வுகள் தான் இதற்கு காரணம்!
8. வீட்டுத் தோட்டத்தில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத்தூள் தூவி விடுங்கள். அவ்வளவுதான். பல நாட்களுக்கு உங்கள் வீட்டுத்தோட்டத்தில் எறும்பு புற்று வைக்காது. அதன் தொல்லையும் இருக்காது.
9. கோமூத்திரத்தை தண்ணீரில் கலந்து தெளித்தால் கீரை செழித்து வளரும்.
10. பயன்படுத்த முடியாத தயிர், அல்லது மோர் இருந்தால், அதை வீட்டுத் தோட்டத்திலிருக்கும் கறி வேப்பிலைச் செடிக்கு ஊற்றிக் கொடுத்தால் கறிவேப்பிலை செழிப்புடன் வளரும்.
11. வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு செயற்கை உரம் போடுவதற்கு பதில் காய்ந்த வேப்பிலைகளைப் போடலாம். செடிகள் நன்கு செழித்து வளரும்.
12. சமையலறையில் காய்கறிகளை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை வேஸ்ட்டாக்காமல் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் செடிகளுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும்.
13. வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பூந்தொட்டிகளில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை காவியை திக்காக கரைத்து பிரஷ்ஷினால் பூசி விடவும். பூந்தொட்டி புதிது போல் பளபளக்கும். அதிலிருக்கும் செடிகளும் பார்க்க பளிச்சென்று இருக்கும்.
14. வீட்டில் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பவர்கள் காய்கறிகளை விட கீரை வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இதனால் அதிகம் வேர் பிடிக்காமலும், ஃப்ரெஷ்ஷாகவும் அதிக தண்ணீர் செலவு இல்லாமலும் இருக்கும்.