

காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலைகளால் அதன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே, அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை, அப்படியே அரித்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவுகளில் உள்ள மர வேர்கள் தடுத்து விடுகின்றன. மலைக் காடுகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாக பெய்து அங்குள்ள வளமான மண்ணை அடித்துச் சென்று விடுகின்றன. குளிர் காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால், காடுகளில் பெய்யும் பனி மெதுவாக உருகும். மேலும், அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும் மற்றும் பூமியின் அடியில் உள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.
வளமான வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல் காரணமாக நிலம் தனது வளத்தை இழப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மனிதன் தனது சுயநலத்திற்காக பெருமளவில் காடுகளை அழித்தான். அதன் விளைவாக தட்பவெப்பநிலை மாறியது, கடும் வெப்பம் காரணமாக காடுகள் மறைந்து பாலைவனங்கள் அதிகரித்தன. அதன் பின்னரே காடுகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.
உலகின் மொத்த வனப்பகுதி 414 கோடி ஹெக்டேர்களாக உள்ளது. இது உலகின் நிலப்பரப்பில் 32 சதவீதத்தை உள்ளடக்கியது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை 54 சதவீதம் ரஷியா, பிரேசில், கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. உலகின் 20 சதவீத காடுகள் இப்போது சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.
ஆஸ்திரேலியா, காங்கோ, இந்தோனேசியாவை தொடர்ந்து இந்தியா உலகின் முதல் 10 காடுகள் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா 10வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மொத்த வனப் பரப்பளவில் இந்தியா உலகளவில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தவிர, வருடாந்திர வனப் பரப்பளவு அதிகரிப்பில் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய காடுகளில் வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் (மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்), இலையுதிர் காடுகள், முள் காடுகள், மாண்டேன் (மலை) காடுகள் (இமயமலைப் பகுதி காடுகள்) மற்றும் சதுப்புநில காடுகள்(சுந்தரவனக் காடுகள்) என பல வகைகள் உள்ளன. இந்தியாவின் மாறுபட்ட புவியியல் காரணமாக இந்த காடுகளின் வகைகள் வெவ்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய காடான சுந்தரவனக் காடுகள் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. இது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வங்காள விரிகுடாவில் சந்திக்கும் இடத்தில் உருவாகும் ஒரு பெரிய டெல்டாவின் ஒரு பகுதியாகும். இந்த டெல்டா 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது, இதில் 40 சதவிகிதம் இந்தியாவில் மற்றும் 60 சதவிகிதம் வங்காளதேசத்தில் உள்ளது. இந்தியாவில் காடுகள் முக்கியமாக தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்களின் கடலோர மாவட்டங்களில் அமைந்துள்ளன.
டாம்பியர் - ஹாட்ஜஸ் கோடு சுந்தரவனக் காடுகளை மேற்கு வங்கத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. இந்தப் பகுதி சதுப்புநிலக் காடுகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் அலைக் கால்வாய்கள் நிறைந்தது. இது உலகின் மிகவும் வளமான மற்றும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
சுந்தரவனக் காடுகள் ராயல் பெங்கால் புலிகளின் புகலிடமாக உள்ளது. இந்தப் புலிகள் சாதாரணமானவை அல்ல. அவை வலிமையான நீந்தும் ஆற்றல் பெற்ற சிறந்த வேட்டையாடிகள். அவற்றால் இரையைத் தேட ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் அலை ஓடைகளைக் கடக்க முடியும். அவற்றின் தோலானது சுற்றுப்புறங்களுடன் ஒத்துப்போவதால் கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாதவை. சுந்தரவனக் காடுகள் மற்றவற்றை விட அதிக ஆக்ரோஷமானவை.
புலிகளை தவிர, இந்தக் காடு பல அரிய மற்றும் அழிந்து வரும் விலங்குகளின் தாயகமாகும். புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், மீன்பிடி பூனைகள், உப்பு நீர் முதலைகள், ராஜநாகங்கள், பல்வேறு பாம்புகள் மற்றும் மானிட்டர் பல்லிகள் உள்ளன. அழிந்து வரும் கங்கை நதி டால்பின் மற்றும் தோல் முதுகு கடல் ஆமை ஆகியவையும் இந்த நீரில் உள்ளன. சுந்தரவனக் காடுகள் பறவை பிரியர்களுக்கு ஒரு சொர்க்கமாகும். 400க்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் சிற்றோடைகளைக் கொண்ட சுந்தரவனக் காடுகள், தனக்கென ஒரு உலகத்தைக் கொண்டுள்ளன. உலகில் உள்ள ஈர நிலங்களிலேயே பெரிய நிலப்பரப்பு கொண்ட சதுப்புநிலம் எது என்றால் அது சுந்தரவன காடுகள்தான்.