

நம்ம ஊர் கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகளைக் கடந்து போகும்போது சில வித்தியாசமான சத்தங்களை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். திடீரென்று ஏதோ ஒரு பறவை விடாமல் கத்திக்கொண்டே இருக்கும். உற்றுப் பார்த்தால் கருப்பும் வெள்ளையுமாய் ஒரு சின்ன கோழி போன்ற உருவம் வேகமாக புதருக்குள் ஓடி மறையும். அந்த சுவாரஸ்யமான பறவைக்கு பெயர்தான் கம்புள் கோழி அல்லது சம்புக்கோழி அல்லது வெண்மார்புக் கானாங்கோழி.
ஆங்கிலத்தில் இதை White-breasted Water hen என்று அழகாக அழைப்பார்கள். பொதுவாக நீர்நிலைகளின் ஓரத்தில் மிகவும் ரகசியமான ஒரு வாழ்க்கையை வாழும் இந்த கம்புள் கோழிகளின் சில சுவாரஸ்யமான வாழ்வியல் முறைகளை இப்போது பார்க்கலாம்.
தோற்றம் வசிப்பிடம்!
இந்த பறவையை பார்ப்பதற்கே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். உடம்பின் மேல்பகுதி முழுவதும் அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறத்திலும், முகம் மற்றும் நெஞ்சுப் பகுதி தூக்கலான வெள்ளை நிறத்திலும் இருக்கும். வாளின் அடிப்பகுதியில் லேசான சிவப்பு நிறம் இருப்பதை நீங்க கவனிக்கலாம். இவை எப்போதுமே தண்ணீருக்கு மிக அருகில் உள்ள நாணல் புதர்கள், தாமரை குளங்கள் மற்றும் சில நேரங்களில் நகரங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களின் ஓரங்களில் கூட அமைதியாக வாழ்ந்து வரும். நடக்கும்போது தனது குட்டையான வாலை அடிக்கடி மேலேயும் கீழேயும் ஆட்டிக்கொண்டே செல்வது இதன் ஸ்பெஷல் ட்ரேட்மார்க் ஸ்டைல்.
உணவுப் பழக்கம், தனித்துவமான கால்களும்!
இந்த கம்புள் கோழிகளுக்கு நீச்சல் அடிப்பதை விட, தண்ணீரில் மிதக்கும் இலைகளின் மீது நடப்பதுதான் ரொம்ப பிடிக்கும். இதற்காகவே இயற்கையாக அவற்றின் கால்களில் மிக நீளமான விரல்கள் அமைந்திருக்கும். இந்த நீண்ட விரல்களை வைத்துக்கொண்டு தாமரை இலைகள் மீது கொஞ்சமும் பேலன்ஸ் தவறாமல் செம கெத்தாக நடந்து செல்லும்.
சேற்றில் மறைந்திருக்கும் சின்னச் சின்ன பூச்சிகள், நத்தைகள், சிறிய மீன்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை தான் இவை தங்களின் பிரதான உணவாக சாப்பிடுகின்றன. மனிதர்களை பார்த்தால் அவ்வளவுதான், உடனே பயந்துபோய் ஏதாவது ஒரு செடிக்குள் ஒளிந்துகொள்ளும் அளவுக்கு இவை ரொம்பவே கூச்ச சுபாவம் கொண்டவை.
மழைக்காலக் கச்சேரி!
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் இந்த கம்புள் கோழிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். தங்களின் பார்ட்னரை கவர்வதற்காக இவை எழுப்பும் சத்தம் இரவு முழுவதும் அந்த பகுதியையே அதிர வைக்கும். தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு ஒருவிதமான மெட்டாலிக் சத்தத்தில் இவை கத்திக்கொண்டே இருக்கும். தண்ணீருக்கு சற்று மேலே உள்ள அடர்ந்த புதர்களில் தான் இவை தங்களின் கூடுகளை பாதுகாப்பாக கட்டும். குஞ்சுகள் பொரித்த சில மணி நேரங்களிலேயே, அந்த சின்னஞ்சிறு குஞ்சுகள் தங்களின் பெற்றோரை பின்தொடர்ந்து தண்ணீரில் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்துவிடும்.
இயற்கையின் உணவுச் சங்கிலியில் இந்த கம்புள் கோழிகளுக்கு ஒரு மிக முக்கியமான இடம் இருக்கிறது. நீர்நிலைகளில் உள்ள தேவையற்ற பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் இவை பெரிய அளவில் உதவுகின்றன. ஆனால், இன்று ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல ஏரிகளும் குளங்களும் அழிக்கப்பட்டு வருவதால், இந்த அழகான கம்புள் கோழிகளின் வாழ்விடமும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது.