
நாம் இப்போ வீணாக்கும் தண்ணீர் எங்கே செல்கிறது? அது மீண்டும் நம்மிடம் வருகிறதா? ஏன் எல்லோரும் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்கிறார்கள்? உபயோகப்படுத்தும் நீர் எங்கெல்லாம் செல்கிறது?
பூமியின் மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீர்நிலைகளில் (Resources) சேமிக்கப்படும் நிலத்தடி நீர்; குடிநீர், விவசாயம், தொழில்துறைக்கு ஒரு முக்கிய வளமாகும். நாம் இந்த நீரைப் உபயோகிக்கிறோம் என்ற பெயரில் திறமையற்ற நீர்ப்பாசனத்தை மேற்கொள்வது (inefficient irrigation), கசிவைக் கண்டு காணாமல் இருப்பது அல்லது கவனக்குறைவான பயன்பாடு மூலம் வீணாக்கும்போது; வெளியேறிய நீர் நேராக மீண்டும் நிலத்தடிக்கு திரும்புவதில்லை. மாறாக, அது பூமியின் மேற்பரப்பில் உருவாகும் நீர் நிலைகளில் கலந்துவிடுகிறது. அதில் சில அளவிலான நீர் ஆவியாகலாம். குறிப்பாக வெப்பமான காலநிலையில் நம் பூமியின் வளிமண்டலத்தில் (atmosphere) இழுக்கப்பட்டு இறுதியில் மழைப்பொழிவாக ஆங்காங்கே பொழிந்துவிடுகிறது. இருப்பினும் அதில் பெரும்பாலானவை வடிகால்கள், ஆறுகள் வழியாக நேராக பெருங்கடல்களில் கலந்துவிடுகின்றன. இறுதியில் நம் நிலத்தடி நீர்நிலைகளை நிரப்பும் இயற்கையான செயல்முறை பல காரணங்களால் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
நகரங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:
நிலத்தடி நீர் நிரப்புவது மெதுவான, அதேநேரம் ஒரு நுட்பமான செயல்முறையாகும். இதற்கு மண், நுண்துளை பாறை அடுக்குகள் (soil and porous rock layers) வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நீர் அடிப்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நகரமயமாக்கல், கான்கிரீட் மேற்பரப்புகள், காடழிப்பு (deforestation) ஆகியவற்றால் நிலத்தடி நீர் சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு அல்லது கிணறுகள் (Rainwater harvesting or injection wells) போன்ற மனிதனால் உண்டாக்கப்பட்ட திட்டங்களைத் தவிர்த்து; நாம் வீணாகும் நிலத்தடி நீர் அரிதாகவே மீண்டும் நிலத்தடிக்குச் செல்கிறது. இது தொடர்கதையாகும் பட்சத்தில் அடிப்பகுதி நீர்நிலையின் குறைவு (aquifer depletion), நிலச்சரிவு, சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுக்கும் (ecological imbalance) வழிவகுக்கிறது.
இன்றைய எச்சரிக்கைகள் இன்றைய நிலத்தடி நீரை வீணாக்குவது எதிர்காலப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் கடல்போல் காட்சியளிக்கும் இன்றைய நீர்நிலைகள் என்றைக்கும் நிலைத்திருக்கும் நீர்த்தேக்கங்கள் அல்ல; அவற்றின் சமநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். காரணம் அதிகப்படியான பயன்பாடு, நாம் செய்யும் மோசமான நீர் மேலாண்மை இந்தச் சமநிலையைச் சீர்குலைத்து விடும். இறுதியில் கிணறுகள் வறண்டு, பம்பிங் செலவுகளை (Borewell) அதிகரித்து, உப்பு நீர் ஊடுருவல் அல்லது மாசுபாட்டால் நீரின் தரம் குறையக்கூடும். வட இந்தியா போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தில் ஆபத்தான சரிவைப் பதிவு செய்துள்ளது என நாசா (NASA) கூறியுள்ளது. அதுவும் சமீபத்திய ஆண்டுகளில் 88 மில்லியன் ஏக்கர் அடி வரை சென்றுள்ளதாம்.
எனவே, எதிர்கால நீர் பற்றாக்குறை பற்றிய எச்சரிக்கை ஒரு கட்டுக்கதை அல்ல; அது அறிவியல்பூர்வமாக அனைவரும் நம்ப வேண்டிய விஷயம். இன்று வீணடிக்கப்படும் ஒவ்வொரு துளியும் நாளைய தேவைகளைத் தக்கவைக்கத் தவறவிட்ட வாய்ப்பாகும். என்னதான் BOREWELL போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும்; நீர் இருந்தால்தானே அதற்கு பயன்.
இதுபோன்ற விழிப்புணர்வு கட்டுரைகளைப் படித்து நீங்கள் மட்டும் உஷாராக நீரை சேமித்தால் மட்டும் போதாது; உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களையும் பின்பற்ற வைக்க வேண்டும். காரணம் உங்கள் சங்கதி செழிக்க வேண்டுமானால் அது உங்கள் கையில் மட்டும் இல்லை; அது உங்கள் அருகில் இருக்கும் அனைவரின் கைகளிலும்தான் இருக்கிறது.