வெள்ளரி விதை முளைக்குமா? வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?

பிஞ்சு விதைகள் ஏன் முளைக்காது? விதை சேகரிப்பு முதல் அறுவடை வரையிலான முழு வழிகாட்டி.
வெள்ளரி விதை
வெள்ளரி விதைGemini image
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

பொதுவாக நாம் சமையலுக்கு வாங்கும் காய்கறிகள், நேரடியாக உண்பதற்கோ, பழச்சாறு கலந்து பருகுவதற்கோ வாங்குகிற பழங்கள் ஆகியவற்றில் உள்ள விதைகள் அல்லது கொட்டைகளைச் சில சமயம் நமது வீட்டுத் தோட்டத்திலோ, செடித்தொட்டியிலோ நட்டு வளர்த்துவது வழக்கம். குறிப்பாக, தோட்டக் கலை அல்லது செடி – கொடி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு, அந்தக் காய்கறியோ பழமோ சுவை மிகுந்ததாக இருந்தால் அதன் விதைகளை நட்டு வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுவது இயல்பு.

இப்படி நாம் வாங்கி வருகிற வெள்ளரிக்காயின் விதைகளைச் சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்த்து, அதன் வம்சாவளி வெள்ளரிக்காய்களைப் பெற முடியுமா?

சில சமயம் முடியும்; சில சமயம் முடியாது. காரணம் என்ன என்பதையும், வளர்ப்பு முறைகளையும் விரிவாகப் பார்ப்போம்.

வெள்ளரி: 

பிஞ்சு முதல் பழம் வரை பொதுவாக நாம் கடைகளில் சாப்பிட வாங்குவது பிஞ்சு வெள்ளரிக்காய்களைத்தான். அவை சுவையாகவும், விதைகள் மென்மையாகவும் இருப்பதால் சாப்பிடுவதற்கு ஏற்றவை. இளம் பிஞ்சாக இருந்தால் விதைகளோடு சேர்த்தே சாப்பிடலாம்.

ஆனால், இந்த விதைகள் முதிர்ச்சியடைந்திருக்காது என்பதால் இவற்றை நட்டால் முளைக்காது.

அதன் விதையிலிருந்து கொடி வளர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வெள்ளரிக்காய் வாங்கினால், நன்கு முற்றிய, அளவில் பெரிய காய்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது வெள்ளரிப் பழமாக இருப்பது சிறப்பு.

தோலின் நிறம் வெளிர் பச்சையிலிருந்து மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறியிருப்பதுதான் வெள்ளரிப் பழம். இந்த நிலையை அடையும்போது, வழக்கத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு பருத்திருக்கும்.

வெள்ளரிப் பிஞ்சு அல்லது காய் மாதிரி வெள்ளரிப் பழம் பச்சையாக உண்பதற்கு ஏற்றதல்ல. சுவையற்று, பூசணி அல்லது சுரைக்காயைப் பச்சையாக சாப்பிட்டது போன்ற உணர்வைத் தரும்.

வெள்ளரிப் பழம் பொதுவாக பெரும்பாலான மக்களால் விரும்பப்படுவதில்லை என்பதால் கடைகளில் விற்பனைக்கு வருவது குறைவு. எனினும் பழக்கடைகளில் கிடைக்க வாய்ப்பு அதிகம். இதைத் துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து சாப்பிடலாம் அல்லது பழச்சாறாக்கி அருந்தலாம். அது மட்டுமல்ல; பூசணி, சுரைக்காய் மாதிரி இதைக் குழம்பும் செய்யலாம்.

(கேரளாவில் வருடப் பிறப்பான விஷு, தமிழ் வருடப் பிறப்பு போலவே கனிகள், கொன்றைப்பூ வைத்து வழிபடப்படும். அதில் வெள்ளரிப்பழம் தவறாமல் இடம்பெறும். பிறகு அதைக் குழம்பு வைப்பது சம்பிராதாயம்).

வெள்ளரிப் பழம் அல்லது முற்றிய வெள்ளரிக்காயில் இருக்கும் விதைகள் முற்றியதாகத்தான் இருக்கும். எனினும் முளைக்க வைப்பதற்குத் தேர்ந்தெடுக்கும்போது நன்கு பருத்து, உறுதியான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது முளைப்புத்திறன் வாய்ப்புக்கானது.

விதைகளை எப்படிச் சேகரிப்பது?

வெள்ளரிக் காய் அல்லது பழத்தை நீளவாக்கில் வெட்டி, உள்ளே இருக்கும் விதைகளையும் அவற்றைச் சுற்றியுள்ள சதைப்பகுதியையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றிக் கழுவி, விதைகளில் ஒட்டியிருக்கும் சதைப்பகுதியை நீக்கலாம். நன்றாகப் பருத்த விதைகளைத் தேர்ந்தெடுத்து, மெல்லிய துணி அல்லது தட்டில் பரப்பி நிழலான, காற்றோட்டமான இடத்தில் உலர்த்த வேண்டும். நேரடியான கடுமையான வெயிலில் காயவைக்க வேண்டாம்.

விதைகள் நன்றாக உலர்ந்ததும் ஈரப்பதம் புகாத சிறிய காகித உறை அல்லது மூடியுள்ள டப்பாவில் வைத்துப் பாதுகாக்கலாம். அதில் விதை எடுத்த தேதியையும் குறித்து வைப்பது நல்லது. இவ்வாறு சேகரித்த விதைகளை உடனடியாக நடவு செய்யலாம் அல்லது அடுத்த சாகுபடிக்காகப் பாதுகாக்கலாம்.

வெள்ளரி விதை
வெள்ளரி விதைGemini image

விதைகளை எப்போது, எப்படி நடவு செய்வது?

வெள்ளரிக்காய் வெப்பத்தை விரும்பி வளரும் கொடிவகைத் தாவரம். நல்ல சூரிய வெளிச்சமும், தண்ணீர் தேங்காத மண்ணும் இதற்கு அவசியம். அதிக மழை பெய்யும் காலத்திலும், கடுமையான வெப்பம் நிலவும் நாட்களிலும் விதைப்பதைத் தவிர்த்து, மிதமான வெப்பநிலை நிலவும் காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொட்டியில் வளர்க்க விரும்பினால், குறைந்தபட்சம் 18 அங்குல அகலமும் ஆழமும் கொண்ட பெரிய தொட்டியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அடியில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் இருக்க வேண்டும். செம்மண், மணல் கலந்த மண், நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து நிரப்பலாம். மண்ணில் தண்ணீர் தேங்காமல் இருப்பது முக்கியம்.

ஒரு தொட்டியில் இரண்டு அல்லது மூன்று விதைகளைச் சுமார் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் தெளிக்கலாம். முளைத்து நாற்றுகள் வளர்ந்ததும் ஆரோக்கியமான ஒரு கொடியை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை அகற்றிவிடலாம். மண்ணில் நடவு செய்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். கொடிகளுக்கு இடையில் போதிய இடைவெளி விட வேண்டும்.

கொடி படர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

வெள்ளரிக் கொடிகள் பல அடி நீளத்துக்குப் படரும். எனவே, தொட்டியில் வளர்த்தாலும் கொடி படர்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். தொட்டிக்கு அருகில் மூங்கில் குச்சிகள் அல்லது மரக்கட்டைகளை நட்டு, வலை அல்லது கம்பி அமைத்து, கொடியை மேல்நோக்கிப் படரவிடலாம். இதனால் இடம் மிச்சமாவதுடன், காய்கள் மண்ணில் படாமல் சுத்தமாகவும் வளரும். மாடித் தோட்டத்தில் வளர்ப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் ஏற்றது.

கொல்லைப்புறத்தில் மண்ணில் நடவு செய்பவர்கள், வேலி அல்லது பந்தல் அருகில் நடலாம். கொடி தரையில் படர்வதற்குப் போதிய இடமிருந்தால் அப்படியும் வளர்க்கலாம். ஆனால், காய்கள் மண்ணில் நேரடியாகப் படும்போது அழுகும் வாய்ப்பு இருப்பதால், பந்தல் அமைத்துப் படரவிடுவது சிறந்தது.

உரமும் தண்ணீரும் எவ்வளவு தேவை?

விதை நடவு செய்வதற்கு முன்பே மண்ணுடன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது வீட்டில் தயாரித்த கம்போஸ்டைக் கலந்து வைக்கலாம். காய்கறிக் கழிவுகள், உலர்ந்த இலைகள் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த மக்கிய உரத்தையும் பயன்படுத்தலாம். அவை நன்றாக மட்கியிருக்க வேண்டும்; புதிதாகச் சேகரித்த சமையலறைக் கழிவுகளை நேரடியாக வேர்ப்பகுதியில் போடக்கூடாது.

செடி வளரத் தொடங்கிய பிறகு, குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு மண்புழு உரம் அல்லது மக்கிய தொழு உரத்தைச் சேர்க்கலாம். மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. குறிப்பாகப் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் மண்ணில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுவது நல்லது.

எப்போது பூக்கும், எப்போது காய்க்கும்?

விதைகள் முளைப்பதற்கு பொதுவாக 3 முதல் 10 நாள்கள் ஆகலாம். பருவநிலை, விதையின் தரம், மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தக் காலம் மாறுபடும். சுமார் 30 முதல் 40 நாள்களில் கொடி நன்கு வளர்ந்து பூக்கத் தொடங்கும். முதலில் ஆண் பூக்களும் பின்னர் பெண் பூக்களும் தோன்றும். பெண் பூவின் அடிப்பகுதியில் சிறிய வெள்ளரிக்காய் போன்ற அமைப்பு இருப்பதை வைத்து அவற்றை அடையாளம் காணலாம். தேனீக்கள் போன்ற பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. அவை வராத இடங்களில் பூக்களுக்கிடையே கையால் மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டியிருக்கலாம்.

பொதுவாக விதைத்த 45 முதல் 70 நாள்களுக்குள் வெள்ளரிக்காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். ரகம், பராமரிப்பு, பருவநிலை ஆகியவற்றைப் பொறுத்து இந்தக் காலம் மாறும். காய்கள் இளம்பச்சையாகவும், நல்ல அளவுக்கு வளர்ந்தும் இருக்கும்போதே பறித்துவிட வேண்டும். அவற்றைச் செடியிலேயே நீண்ட நாள்கள் விட்டுவிட்டால், புதிய காய்கள் உருவாவது பாதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
20 நாட்களில் கைநிறைய வெந்தயக் கீரை: வீட்டிலேயே வளர்க்கும் எளிய முறை!
வெள்ளரி விதை

ஹைபிரிட் வெள்ளரிக்காய் விதைகள் முளைக்குமா?

ஹைப்ரிட் எனப்படும் வீரியக் கலப்பின ரகக் காய் கனிகளில் இருந்து எடுக்கப்படுகிற விதைகள் முளைக்காது அல்லது முளைத்தாலும் அவற்றிலிருந்து காய்கள் வராது என்ற தவறான நம்பிக்கை சிலரிடமும் நிலவுகிறது. வீரியக் கலப்பின (F1 Hybrid) காய், கனிகளில் இருந்து எடுக்கப்படும் விதைகள் பெரும்பாலும் முளைக்கும்; செடியும் வளரும். ஆனால், அந்தச் செடியிலிருந்து கிடைக்கும் விளைச்சல், தரம் மற்றும் சுவை ஆகியவை நீங்கள் முதலில் சாப்பிட்ட காய் அல்லது பழத்தைப் போல இருக்காது.

தற்காலத்தில் விற்பனைக்கு வரும் வெள்ளரிக்காய்களில் பல ஹைபிரிட் ரகங்களைச் சேர்ந்தவை. எனவே, அவற்றிலிருந்து எடுக்கப்படும் விதைகளை நட்டு வளர்த்தால் தாய்க்காயின் அதே சுவை, வடிவம், அளவு, மகசூல் ஆகிய பண்புகளைக் கொண்டிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இதையும் படியுங்கள்:
கடையில் வாங்கிய கத்தரிக்காய் விதை போதும்! தொட்டியில் எளிதாகக் கத்தரி வளர்க்கும் வழி!
வெள்ளரி விதை

ஹைபிரிட் விதைகளின் அடுத்த தலைமுறையில் பண்புகள் பிரிந்து மாறுபடலாம். எனவே, விதைகளைச் சேகரித்து தொடர்ந்து வளர்க்க விரும்புபவர்கள் நாட்டு ரகங்கள் அல்லது ஹைபிரிட் அல்லாத திறந்த மகரந்தச் சேர்க்கை ரகங்களிலிருந்து விதைகளைப் பெறுவது சிறந்தது.

கடையில் வாங்கும் எல்லா வெள்ளரி விதைகளும் செடியாக மாறுவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, சரியான விதையைத் தேர்ந்தெடுத்து, தொட்டியிலோ கொல்லைப்புறத்திலோ சொந்தமாக வெள்ளரிக்காய் அறுவடை செய்யும் தெளிவு வாசகருக்குக் கிடைக்கும்.