
ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு என்பது தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவை ஒரு சீரான சுழற்சியில் தொடர்புகொள்ளும் ஒரு வாழும் வலையமைப்பாகும் (Balanced Cycle). இந்த அமைப்புகள் காலநிலையை (climate) ஒழுங்குபடுத்துகின்றன, காற்று, நீரை சுத்திகரிக்கின்றன; இறுதியில் பல்லுயிரை (biodiversity) ஆதரிக்கின்றன.
எப்போது மனிதன், விலங்குகள் சேர்ந்து வாழத் தொடங்கின? மனித செயல்பாடு நீண்டகாலமாக சுற்றுச்சூழலில் பெரும் தாக்கங்களைத் தந்துள்ளது. குறிப்பாக விலங்குகளை அவர்களுடன் சேர்த்து வளர்ப்பதன் மூலம்; சுற்றுச்சூழல், மனித நாகரிகம் இவை இரண்டிற்கும் ஒரு மறுவடிவமைப்பு கிடைத்துள்ளது.
மனிதர்களுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு புதிய கற்காலத்தில் (Neolithic period) சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு ஆசியா, சீனா மற்றும் ஆண்டிஸ் (Andes) போன்ற பகுதிகளில் ஆரம்பகால விவசாய சமூகங்கள் தோன்றியபோது தொடங்கியது.
அதுவும் நாய்கள் இன்னும் முன்னதாகவே சுமார் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக வேட்டைக்காரர் சமூகங்களுக்குள் வளர்க்கப்பட்டன. மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்கியபோது செம்மறி ஆடுகள், பன்றிகள், கால்நடைகள், குதிரைகள், கோழிகள் போன்ற விலங்குகள் படிப்படியாக உணவு, உழைப்பு மற்றும் உதவிக்காக அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்பட்டன.
நவீனமயமாக்கல் இருப்பினும் காலப்போக்கில் பல வீட்டு விலங்குகள் மனித சூழல்களில் இருந்து விலகிச் சென்றுவிட்டன. கழுதைகள், ஒட்டகங்களில் தொடங்கி ஒரு காலத்தில் போக்குவரத்து, விவசாயத்திற்கு இன்றியமையாததாக இருந்த சில வகையான கால்நடைகள் இப்போது நகர்ப்புறங்களில் குறைவாகவே காணப்படுகின்றன. கிராமப்புற வீடுகளில் சாதாரணமாக ஒரு காலத்தில் காணப்பட்ட கோழிகளும், ஆடுகளும்கூட இப்போதெல்லாம் வணிகப் பண்ணைகளில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன.
நகரமயமாக்கல், இயந்திரமயமாக்கல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இந்தப் பிரிவினை ஏற்படுகிறது.
நகரங்கள் விரிவடைந்து அதிலுள்ள தொழில்நுட்பம் விலங்கு மூலம் வந்த உழைப்பை முற்றிலும் எடுத்துக்கொள்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளின் இருப்பைக் குறைக்கின்றன. கூடுதலாக சுகாதாரம், சத்தம் மற்றும் இடம் (Crowded place) போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் விலங்குகளை வைத்திருப்பதில் கடுமையான விதிமுறைகளும் இப்போது பின்பற்றப்படுகின்றன.
விலங்குகளை மனிதர்களிடம் இருந்து பிரித்தால் என்னாகும்? இந்த இடைவெளி சுற்றுச்சூழலில் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. காரணம் ஊட்டச்சத்து சுழற்சி, விதை பரவல் (seed dispersal), பூச்சிக் கட்டுப்பாட்டில் நம் வீட்டைச் சுற்றி நடமாடும் விலங்குகள் ஒரு காலத்தில் பங்கு வகித்தன.
இருப்பினும் மனிதர்களையும், சாதாரண விலங்குகளையும் தனித்தனி பகுதிகளில் வைத்திருப்பது (நகரங்களிலிருந்து விலகி தனித்தனி பண்ணைகள் இருப்பது) சில நேரங்களில் கை கொடுக்கலாம். இது நோய்கள் பரவும் வாய்ப்பைக் குறைக்கிறது. காரணம் மனிதனால் தெரிந்தோ, தெரியாமலோ உண்டாகும் தீங்குகளால் அவைகளின் உணவுகளில் கலக்கும் நச்சு போன்ற விஷயங்கள் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. இறுதியில் இது சுற்றுச்சூழலுக்கு பெரும் துணையாகக்கூட மாறலாம்.