கூவத்தை இப்படிச் சுத்தம் செய்யலாமே!

Cooum River
Cooum River
Published on

'ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்

அழகிய ரைன் நதி ஓரத்தில்

மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல்!'

என்ற சிவந்த மண் சினிமா வசனத்தை மறக்க முடியாது.

சிந்து, நைல், நைஜர், அமேசான், ஹட்சன், ஹான், ரைன் என்று சிறந்த நதிகள் உலகில் ஏராளமுண்டு.

மேலை நாடுகளில் நதிகளைப் போக்குவரத்திற்கும், பொழுது போக்கிற்கும் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நம் நாட்டிலும் நதிகளுக்குக் குறைவில்லை. கங்கையும், காவிரியும், வைகையும், ஹூக்லியும், தாமிரபரணியும் இன்ன பிறவும் நம் ஊர்களுக்கு வளம் சேர்ப்பவை; நம் வாழ்வுடன் இணைந்தவை.

நகரின் நடுவேயும், பக்கத்திலும் ஓடும் ஆறுகள், அந்த நகரங்களுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரின் இடையேயான நதி, இரவில் இந்திர லோகமாக ஜொலிக்கும்!

நம் சென்னை நகரின் நடுவேயும் கூவம் ஆறு ஓடுகிறது. ஆனாலும் ஒதுக்கப்பட்ட இடமாகவே அது பார்க்கப்படுகிறது. இருக்கு… ஆனா இல்லை! என்பது போலத்தான் அதன் நிலை உள்ளது. அடையாறு, கொற்றலையாறு என்ற மற்ற இரண்டு ஆறுகள் நகரில் ஓடினாலும், கூவத்திற்கே தனிச் சிறப்பு!

சுமார் 70 கி.மீ., க்கும் மேல் நீளமுள்ள இந்த ஆற்றில், நல்ல தண்ணீர் ஓடியதாகவும், படகுப் போட்டிகள் நடைபெற்றதாகவும், வரலாற்று ஏடுகள் விளம்புகின்றன!ஆனால், நாம் காணும் கூவமோ, வேறாக இருக்கிறது. முகஞ்சுளிக்க வைக்கும் தேங்கிய கழிவு நீர்! அதில் மிதக்கும் குப்பை, கூளங்கள்! கண்களை மூடிக் கொண்டு ஆற்றைக் கடந்தாலும் நாசி வழி நாற்றம் வந்து, ஆற்றைக் கடக்கிறோம் என்று உணர்த்தி விடும்!

சென்னை நகர் வளர, வளர, இந்த ஆறு அதிகம் கழிவுகளைச் சுமக்க வேண்டிப் போனதால், தூய்மைக்குக் ‘குட் பை!’ சொல்லி விட்டது.

நமக்குத் தெரிந்து, கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகவே கூவத்தைச் சுத்தப்படுத்தப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களேயொழிய, அது சுத்தமாகவில்லை!

ஏதேதோ திட்டங்கள்!… எவ்வளவோ கடன் வசதிகள்!…என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவேயொழிய, கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டதாக எந்தச் செய்தியும் வரவில்லை!

இதையும் படியுங்கள்:
'கூவம்' போன்றே ஆறு தான் இப்போது சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது! எது தெரியுமா?
Cooum River

எம் மனதில் படுகின்ற எளிதான திட்டம் இது!

கூவம் ஆறு ஆரம்பிக்கும் இடத்திற்கு, ராட்சத மோட்டார்கள் மூலம் நீரைக் கொண்டு வந்து,கரை புரண்டோடும் அளவுக்கு விட வேண்டும். எங்காவது நீர் தேங்கினால், அந்த இடங்களை எந்திரம் மூலம் சுத்தம் செய்து, தடையில்லாத நீரோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதாவது, சுழித்தோடும் ஆறாக அதனை மாற்ற வேண்டும்.

வேகமாகப் பாய்கின்ற நீர், ஆறுகளிலுள்ள கழிவுகளை அடித்துச் சென்று விடும். மேலும், ஓடுகின்ற நீர், துர் நாற்றத்தை முழுமையாக அகற்றி விடும். இப்படிப் பல நாட்களுக்குத் தொடர்ந்து நீரை ஓட விட்டால், மெல்ல நீர் தூய்மை பெற ஆரம்பிக்கும்.

நீரின் வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள, வசதியான பல இடங்களைத் தேர்வு செய்து, அங்கெல்லாம் ராட்சத மோட்டார்கள் மூலம் நீரை ஆற்றில் விடலாம்! இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒன்றுதான்!ஆற்றின் ஆரம்பத்திலிருந்து அது கடலில் கலக்கும் நேப்பியார் பால எல்லை வரை, ஆறு சுழித்தோட வேண்டும். தேவையான இடங்களில் ஆழப்படுத்தியும், சங்கமிக்கும் இடத்தில் நீர் தேங்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். கரைகளை முன் கூட்டியே பலப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிங்காரச் சென்னையின் அடையாளமான கூவம் ஆறு குறித்த தகவல்கள்!
Cooum River

இவ்வாறு செய்தாலே நீர் மாசு மெல்லக் குறைவதுடன், வீசுகின்ற துர் நாற்றமும் மெதுவாக அகன்று விடும். நீரியல் நிபுணர்கள் எவ்வளவு திட்டங்களை அறிவித்தாலும், அடிப்படையாக அமைவது, இதுவாகவே இருக்கும். வேகமான நீரோட்டமே ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பல காரணிகளில் முதன்மையான காரணியாகும்.

கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்த, அரசு முதலில் இந்த எளிய முறையைப் பரீட்சித்துப் பார்ப்பது நல்லது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com