
எத்தனை வயதானாலும் நம்மை இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும் உணவு வகைகளின் இடத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1.முதல் இடத்தில் இருப்பது நெய் அல்லது வெண்ணெய். பித்த உடம்பு உள்ளவர்கள் நெய் சாப்பிடாமல் வெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து காலையில் 3 ஸ்பூன் நெய்யை உருக்கி வெறும் வயிற்றில் குடித்துவிட்டு இடையிடையே சுடுதண்ணீர் குடிக்கலாம். 30 நாட்கள் தொடர்ந்து குடிக்கும் போது பள பளத்த தோலுடன் மிகுந்த மாற்றத்தை பெறலாம். நெய்யை உருக்காமல் சாப்பிட கூடாது. மேலும் இரவு நேரத்திலும் வேண்டாம்.
2. இரண்டாவதாக மூலிகை ஜூஸ். அதிகமாக சித்தர்கள் பயன்படுத்திய ஜூஸ் மூலிகை ஜூஸ். கல்லீரல் பிரச்னைக்கு கரிசலாங்கண்ணி கீரையோடு மோர், உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி 41 நாட்கள் குடித்தால் கல்லீரலில் பெரிய மாற்றம் கிடைக்கும். முருங்கை கீரை சூப் மற்றும் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
3. மூன்றாவதாக சோற்றுக் கற்றாழை. தலைக்கு போடுவது, முகத்துக்கு போடுவதைவிட சிறந்தது உள்ளுக்குள் சாப்பிடுவது சிறந்தது. உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து 7 தடவை தண்ணீரில் கழுவி 2 மிளகு, 2 கல் உப்பு சேர்த்து அரைத்து சாப்பிடலாம். ஒரு பெரிய துண்டு ஜெல், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாக குடிக்கலாம்.
4. அனைத்து வகையான பயறுகள் (புரத உணவுகள்) உதாரணமாக கறுப்பு, வெள்ளை சுண்டல், பச்சைப்பட்டாணி, கிட்னிபீன்ஸ், சோயாபீன்ஸ், நரி பயறு ஏதாவது ஒரு வகையோடு ஒரு பழம் வைத்து காலை உணவாக சாப்பிடும்போது ஜீரணத்துக்கு சிறந்ததாக இருக்கும். மேலும் பயறோடு வெள்ளரித்துண்டுகள், உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்து சேலடாகவும் சாப்பிடலாம். இது உடல் நிலையில் சிறந்த மாற்றத்தை தரும்.
5. தேன் இது ஒரு தெய்வ உணவு. அனைத்து வகையான பூக்களில் இருந்து தேனி என்ற தேவதைகள் நமக்காக அலைந்து திரிந்து சிறிது சிறிதாக சேகரித்து தருகின்ற அற்புதமான உணவு. பழ ஜூஸ் குடிக்கும் போது ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து அருந்தலாம் அடிக்கடி தேன் சாப்பிடும் போது மூளைவளர்ச்சிக்கு, கண்பார்வைக்கு, நல்லது. இளமையை அதிகரிக்க கூடிய மந்திர உணவு தேன்.
6. மாதுளைப்பழம் சளி தொந்தரவு ஒன்றும் இல்லை என்றால் நன்றாக சாப்பிடலாம். ஜூஸாக குடிக்கலாம். எலும்புகள் பலமாகும். தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்ச்சி யுடன் வைத்திருக்கும். மாதுளை பழத்துடன் 4 கற்பூரவல்லி இலை, ½ ஸ்பூன் மிளகு தூள், உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்தால் தொண்டை தொற்றுக்கள் வராது.
7. அத்தனை உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடியது தேங்காய். பச்சை தேங்காய் சாப்பிடுவது குடல்புண்களை அகற்றக்கூடியது. கண்பார்வைக்கும், மற்றும் தோலுக்கும் சிறந்தது. ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு அரைமூடி தேங்காய் எடுத்து ஏலக்காய், கருப்பட்டி சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி 30 நாட்கள் கொடுத்தால் குழந்தை மிகவும் சுகத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.
8. கவுனி அரிசி இது ஒரு ராஜ உணவு. நரம்புகளை பலப்படுத்தி, உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றி ஆயுளை அதிகரிக்கக் கூடியது. காலை, மாலை, இரவு எந்த வேளையிலும் கஞ்சியாகவோ, சாம்பார் சாதமாக சாப்பிடலாம்.
9. அனைத்து வகையான கீரைகளையும் சாப்பிடுவதால் உடல் சுருக்கங்கள் மறைந்து ஆயுளை அதிகரிக்கும். குடல் உறுப்புகள் சுத்தமாகும். மலச்சிக்கல் சரியாகும்
10. அனைத்து வகையான பழங்களும், காய்கறிகளையும் ஜூஸாகவோ, சேலடாகவோ சாப்பிடுவதால் ஆயுளை அதிகரித்து இளமையாக வைத்திருக்கும்.