
சில பெண்மணிகள் குழம்பு கொதிக்கும்போது வரும் வாசனையை வைத்தே அதில் உப்பு ஒரு கல் போடவேண்டும். மிளகாய் போதும். காய்கறி குறைத்து போட்டாயா மசாலா வாடை தூக்கலாக இருக்கிறது. புளிப்பு போதவில்லை என்பதை கூறி விடுவார்கள். அதை மாற்றி நேர்த்தி செய்துவிட்டால் குழம்பு ருசியோ ருசிதான். அதற்கான சில குறிப்புகள்:
கொத்தவரங்காய் கூட்டு, பொரியல் என்று செய்யும் பொழுது வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்தால் அதன் கசப்பு தன்மை குறைந்துவிடும். சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
பாகற்காய் கூட்டு செய்தால் சிறிது வெல்ல கட்டி சேர்க்கலாம். கசப்பு தெரியாது. வறுக்கும்போது மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பிசறி வறுக்க ருசியாக இருக்கும். பொரியல் செய்யும்பொழுது வெங்காயத்தையும் கேரட்டையும் சம அளவு கலந்து செய்யலாம். இப்படி மாற்றி செய்யும் பொழுது அனைவரும் விரும்பி உண்பர்.
சேனைக்கிழங்கை செந்நிறமாக உள்ளதாக பார்த்து வாங்கி அதனுடன் கருப்பு சுண்டலை சம அளவு கலந்து இதர சாமான்கள் கலந்து செய்தால் கூட்டு பிரமாதமாக இருக்கும்.
மோர் குழம்பு வைக்கும் பொழுது வீட்டில் வடை செய்தால் அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி போட்டு மோர் குழம்பை பரிமாறலாம்.
மைதாவையும் ரவையையும் சமஅளவாக கலந்து அதனுடன் மிளகு சீரகத்தை பொடித்து போட்டு வைத்து விட்டால் தேவையான பொழுது கரைத்து ரெடிமேடு தோசை ஊற்றி சமாளிக்கலாம்.
ராகிமாவையும் கோதுமை மாவையும் சமஅளவு அளந்து தோசை ஊற்றினால் கோதுமையில் உள்ள வழவழப்பு தன்மை போய் கேழ்வரகில் உள்ள வறட்டு தன்மை நீங்கி தோசை சத்து நிறைந்ததாக நன்றாக இருக்கும்.
சிவப்பு அவலை வறுத்து மிளகாய் வற்றல் கருவேப்பிலை வேர்க்கடலை மூன்றையும் எண்ணெயில் பொரித்து எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து வைத்துக் கொண்டால் சட்டென்று உப்புமா செய்து சாப்பிடலாம்.
ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் இவற்றை அழகாக நறுக்கி அதன் மீது சிறிது தேன் கலந்து வீட்டில் இருக்கும் ஏதாவது சில நட்ஸ்களை அதன் மீது தூவி பரிமாறலாம். இந்தப் பழங்கள் கட் பண்ணியது மீதம் இருந்தால் பஜ்ஜி செய்யும்பொழுது பழபஜ்ஜியாக கலந்து செய்து கொடுக்கலாம்.
கோவக்காய் கூட்டு வறுவல் பொரியல் என்று செய்யும் பொழுது அதனுடன் பச்சைப் பட்டாணியை கலந்து செய்தால் அனைவரும் விரும்பி உண்பர்.
வெண்டைக்காய் வதக்கி கொடுத்தால் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று போர் அடிக்கிறதா? அதை நீளவாக்கில் கீறி அதனுடன் நீளவாக்கில் அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி சில துளிகள் எலுமிச்சைசாறு கலந்து சாம்பார் பொடி, தேங்காய் துருவல், குழையாத பருப்பு மூன்றையும் சேர்த்து வதக்கி எடுக்க ருசி பிரமாதமாக இருக்கும்.
வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட் இவைகளை ஒரே சீராக வில்லைகளாக நறுக்கி ஒன்றன் மீது ஒன்றாக வைத்து சிறிதளவு விருப்பப்பட்டால் மிளகுத்தூள் கலந்து சாப்பிட ருசிக்கு ருசி சத்துக்கு சத்து நிச்சயம். பற்களும் சுத்தமாகும்.
கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா கலந்து லேசாக வறுத்து பொடித்து காலையில் கஞ்சி செய்து சாப்பிடலாம். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு திலகமாய் திகழ இது சிறந்த வழி.