
தேங்காய் சாதம் செய்யும்போது பொட்டுக் கடலையை நன்கு வறுத்துப்போட்டுக் கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
சாம்பாருக்காக துவரம் பருப்பை வேகவைக்கும்போது, அதில் சிறிதளவு நெய் விட்டு வேகவைத்தால் சீக்கிரம் வேகும். சாம்பாரின் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
தோசைக்கு ஊறவைக்கும்போது ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊறவைத்து, அரிசியுடன் சேர்த்து அரைத்து அந்த மாவில் தோசை வார்த்தால் சுவையான, ஆரோக்கியமான தோசை ரெடி.
பீட்ரூட், மிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல், சீரகம் இவற்றை வதக்கி, அரைத்துத் துவையல் செய்து பாருங்கள். பூரி, தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையான சைடு டிஷ் தயார்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரஸ்க் தூளைத்தூவினால் வறுவல் கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
வெங்காய அடை செய்யும்போது, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால் அடை சுவையோ சுவை.
பாசிப் பருப்பு சுண்டலுக்கு பாசிப்பருப்பு குழையாமல் முத்து முத்தாக இருக்க வேண்டுமானால், இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பாசிப்பருப்பை வறுத்து கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடித்தால் சுவையான சுண்டல் தயார். தாளித்துவிட்டால் போதும்.
அல்வா செய்யும்போது, வெண்ணையை அரைப்பதமாக உருக்கி வைத்துக்கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அல்வா கிளறிப்பாருங்கள். நெய் பதமாக காய்ந்து அல்வா மிகவும் சுவையாக இருக்கும்.
தோசை மாவு அரைக்கும்போது உளுந்தோடு சிறிதளவு கடலைப்பருப்பையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வார்க்கும் தோசை பொன்னிறமாக வரும்.
இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்கவைக்கவும்.
ஏதாவது ஓரு எஸ்ஸன்ஸ் ஊற்றவும். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் பரிமாற திடீர் பாயசம் தயார்.
அடை, தோசைமாவில் சிறிது ஓம வாட்டர் கலந்து வார்த்தால் அஜீரணத் தொல்லைகள் ஏற்படாது.