

மிளகாய் பஜ்ஜி செய்யும்போது மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சைச்சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு செய்யும் பஜ்ஜி டேஸ்ட்டில் அசத்தும்.
அவல்பொரியை அப்படியே பாகில் போடுவதற்கு பதில் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்துப்பாருங்கள். பொரி உருண்டை மொறு மொறுப்பாக இருக்கும்.
கேசரி செய்யும்போது தண்ணீரின் அளவைக்குறைத்துக் கொண்டு பால் சேர்த்துக் கொண்டால் கேசரி சுவை மிகுந்து இருக்கும்.
வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸைச் சேர்த்தால் சூப்பின் சுவையே அலாதிதான்.
சப்பாத்தி, பூரி போன்ற பலகாரங்களுக்கு மாவு பிசையும்போது, தண்ணீர் மற்றும் பால் சேர்க்காமல், மில்க் மெய்டு விட்டுப் பிசைந்து தயாரித்தால் சுவையாக இருக்கும்.
தயிர்வடை செய்யும்போது, வடைகளை, வெந்நீரில் முக்கி எடுக்காமல் சூடான பாலில் தோய்த்து எடுத்து தயிரில் ஊறவையுங்கள். இப்படி செய்யும் தயிர்வடை ருசி மாறாமல் புளிப்பு வாடை வராமல் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.
பிரியாணி சமைப்பதற்கு எப்போதும் புதிதாக அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை பயன்படுத்தினால் பிரியாணியின்மணமும், சுவையும் நன்றாக இருக்கும்.
தயிர் பச்சடி நீர்த்துப்போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி செய்து கலந்து விடுங்கள். இதனால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும், சத்தும் கூடும்.
தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமாவின் சுவை அதிகரிக்கும்.
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியைக் கலந்து, அடையாகத் தட்டி, இட்லித்தட்டில் வேகவைத்தால் சுவையான அடை ரெடி.
புளித்த தோசை மாவை வேஸ்ட் பண்ணாமல் அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து சுவையான பணியாரம் செய்யலாம்.
சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த்துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சூப்பர் சுவையில் பச்சடி தயார்.