

பக்கோடா செய்யும்போது, முழுவதும் கடலைமாவில் செய்யாமல், நாலில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால் பக்கோடா மொறுமொறுவென்று சுவையாக இருப்பதுடன், அதிக சத்தும் கிடைக்கும்.
சூப்பில் போடுவதற்கு கைவசம் க்ரீம் இல்லையா? சிறிது வெண்ணையில் சிறிதளவு பாலைக்கலந்து நன்கு கலக்கி, அதை க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
தேங்காய் உடைத்த நீர் சேர்த்து,கோதுமை மாவைப் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
துவரம்பருப்பு சீக்கிரமாக வேகவேண்டுமா? பருப்புடன் தேங்காய்த்துண்டை சேர்த்து வேகவிட்டால் சீக்கிரமாக வெந்துவிடும்.
எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகளை சிறிதளவு சேர்த்துக்கிளறினால் ஊறுகாய் சுவை மிகுந்து இருக்கும்.
தோசைமாவு மிகுந்து விட்டதா?அதில் சிறிது கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் உப்பு போட்டு சுவையான பக்கோடா செய்யலாம்.
ரவா தோசை செய்யும்போது, ரவையை வறுத்துக்கொண்டு பிறகு கரைத்து வார்த்தால் கல்லில் ஒட்டாமல் வரும்.
பூரி மசாலா செய்யும்போது சிறிது கடலைமாவைச் சேர்த்து செய்து பாருங்கள். நல்ல வாசனையாகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
ரவா லட்டு செய்யப்போறீங்களா? சிறிதளவு அவலை மிக்ஸியில் ரவை போலப்பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து, கொஞ்சம் பால் பவுடரையும் கலந்து லட்டு பிடித்தால் சுவை அதிகரிக்கும்.
பண்டிகை சமயத்தில் செய்யும் மைசூர்பாகு, லட்டு, பர்ஃபி போன்றவற்றிலிருந்து விழும் துகள்களை சுண்டக்காய்ச்சிய பாலில் சேர்த்து பாயசமாக செய்தால் சுவையோ சுவை.
குக்கர் கறை படிந்திருக்கிறதா? கறை படிந்த குக்கரில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி அழுத்தி தேயுங்கள். அதன் பிறகு குக்கரை நன்றாக கழுவியெடுத்தால் கறை அறவே நீங்கிவிடும்.
குலோப் ஜாமூன் மிக்ஸில் உப்பு, காரம், பனீர் சேர்த்து சுவை மிகுந்த ' பனீர் கோஃப்தா'தயாரிக்கலாம்.