வெறும் 15 நிமிடத்தில் மைக்ரோவேவ் அவனில் 'வெஜ் புலாவ்' செய்வது எப்படி?

microwave-veg-pulao
microwave-veg-pulao
Updated on

வேலை முடிந்து சோர்வாக வரும்போதோ அல்லது சமைக்கவே சோம்பேறித்தனமாக இருக்கும் நாட்களிலோ, சமையலறையில் மணிக்கணக்கில் நிற்காமல் ருசியாக எதையாவது சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்ட நேரங்களில் உங்களுக்குக் கைகொடுக்கும் ஒரு சூப்பர் ரெசிபிதான் 'மைக்ரோவேவ் வெஜ் புலாவ்'. 

குக்கரில் அடிப்பிடித்து விடுமோ, அரிசி குழைந்து விடுமோ என்ற கவலையே இல்லாமல், உதிரி உதிரியாகவும் வாசனையாகவும் புலாவ் செய்ய மைக்ரோவேவ் அவன் ஒரு அருமையான சாதனம். பேச்சுலர்கள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான காய்கறிகள் நிறைந்த ஒரு உணவை எப்படி மைக்ரோவேவ் அவனில் சுலபமாகச் செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 1 கப்

  • தண்ணீர் - 1.5 கப்

  • பெரிய வெங்காயம் - 1 

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • கேரட், பீன்ஸ், பட்டாணி - 1 கப்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1

  • நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

செய்முறை! 

ஒரு கப் பாஸ்மதி அரிசியை உடையாமல் லேசாகக் கழுவி, சுமார் 20 நிமிடங்கள் நல்ல தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அரிசி ஊறும் இந்த நேரத்தில், புலாவிற்குத் தேவையான கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, அதோடு சிறிது பச்சை பட்டாணியும் சேர்த்துத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளைச் சற்று பொடியாக நறுக்கினால், அவனில் அது சீக்கிரமாகவே வெந்துவிடும்.

இப்போது ஒரு மைக்ரோவேவ் அவனில் வைக்கக்கூடிய கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை அப்படியே அவனில் வைத்து அதிகபட்ச வெப்பநிலையில் 1 நிமிடம் மட்டும் வையுங்கள். 

ஸ்பைசஸ் நெய்யில் பொரிந்து நல்ல மணம் வரும். பாத்திரத்தை வெளியே எடுத்து, அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் கலந்து, மீண்டும் 2 நிமிடங்கள் அவனில் வையுங்கள். வெங்காயம் வதங்கி, இஞ்சி பூண்டின் பச்சை வாசனை முற்றிலும் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
அடுத்ததாக ஒரு காதல் படம்! புதுமுக நடிகர்களை களத்தில் இறக்கும் மணிரத்னம்!
microwave-veg-pulao

அடுத்ததாக, நாம் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை அந்தப் பாத்திரத்தில் சேர்க்கவும். அதோடு, ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியைத் தண்ணீர் இல்லாமல் வடித்துச் சேர்த்து, நெய்யோடு ஒட்டும்படி மெதுவாகக் கலந்து விடுங்கள். 

ஒரு கப் அரிசிக்குச் சரியாக ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றுவதுதான் மைக்ரோவேவ் சமையலுக்கான சரியான பக்குவம். தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஒருமுறை நன்றாகக் கலந்துவிட்டு, பாத்திரத்தை மைக்ரோவேவ் மூடி கொண்டு மூடிவிடுங்கள்.

இப்போது இந்தப் பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்து, 'High Power'-ல் சுமார் 12 முதல் 14 நிமிடங்கள் வரை வேகவிட வேண்டும். நேரம் முடிந்ததும் உடனடியாக வெளியே எடுக்காமல், ஒரு 5 நிமிடம் அவனுக்குள்ளேயே அப்படியே விட்டுவிடுங்கள். இந்த நேரத்தில்தான் மிச்சமிருக்கும் ஈரம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, அரிசி நன்றாக மலர்ந்து உதிரியாக மாறும். 

இதையும் படியுங்கள்:
உயிரின் முதல் இணைப்பு: தொப்புள் கொடியின் மகத்துவமும் அதன் பாதுகாப்பும்!
microwave-veg-pulao

அதன் பிறகு வெளியே எடுத்து, ஒரு முட்கரண்டியால் சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி விடுங்கள். அவ்வளவுதான், வீடு முழுவதும் மணக்கும் சூடான, சுவையான மைக்ரோவேவ் வெஜ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயத் தயிர்ப்பச்சடி இருந்தாலே போதும், தட்டு நிமிடத்தில் காலியாகிவிடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com