

முட்டை இல்லாத காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த சைவ ஆம்லெட் அசத்தலான சுவையில் இருக்கும்; செய்வதும் எளிது. அசல் சுவையில் இந்த ஆம்லெட் இருக்க வேண்டும் என்றால் உடுப்பி ஸ்டைலில் செய்து அசத்தலாம். செய்வது சுலபம் ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். காரணம் வெள்ளைக் கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து (8 மணி நேரம் ஊற வேண்டும்) காலையில் அரைத்து செய்ய வேண்டும்.
ருசி அசத்தலாக இருக்கும். ஆனால் இந்த அவசர யுகத்தில் இரண்டே நிமிடத்தில் சுவையான வெஜிடேரியன் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்ப்போமா? அதற்கு முன் ஆம்லெட் பிறந்த கதை பற்றி தெரிந்து கொள்வோமா?
பல நூற்றாண்டுகளாக குறிப்பாக பண்டைய பெர்சியாவில் (இன்றைய ஈரான்) இருந்து வந்த ஒரு உணவாகும். இதன் உண்மையான வரலாறு தெளிவாக இல்லை. ஆனால் ஒரு பிரபலமான கதையின்படி, நெப்போலியன் போனபார்ட்டின் படைகள் ஒரு நகரத்தில் தங்கியிருந்தபோது, ஒரு பெரிய ஆம்லெட் தயாரித்து அதைத் தான் ருசித்து உண்டதால், ஆம்லெட் பெர்சியாவிலிருந்து பிரான்சுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெஸ்ஸியர்ஸ் நகரத்தில் இன்றும் ஈஸ்டர் பண்டிகையின் பொழுது 'ராட்சத ஆம்லெட் திருவிழா' கொண்டாடப்படுகிறது.
2 நிமிட வெஜ் ஆம்லெட்:
கடலை மாவு ஒரு கப்
அரிசி மாவு 2 ஸ்பூன்
வெங்காயம் 1
பழுத்த தக்காளி 1
குடைமிளகாய் 2 ஸ்பூன்
கோஸ் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
காரப் பொடி 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கோஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, பொடியாக நறுக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், காரப் பொடி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும். மாவுக் கலவையானது முட்டை ஆம்லெட்டின் டெக்ஸ்டர் பதத்திற்கு மென்மையான மாவாக தயார் செய்யவும்.
அடுப்பில் தோசைக் கல்லை சூடாக்கி சிறிது எண்ணெய் விட்டு, தயார் செய்த மாவை கல்லில் ஊற்றி மெல்லியதாக பரப்பவும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வேகவிட்டு பொன் கலரில் வந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். சூடாக சாப்பிட மிகவும் ருசி அதிகரிக்கும்.
இதனை காலை உணவாகவும் சாப்பிடலாம்; ஈவினிங் டீயுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். மதிய உணவின் (lunch) போது சாம்பார் சாதத்துடன் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட சிறந்த சைட் டிஷ் ஆகவும் இருக்கும்.