

அடைக்கு மாவு அரைக்கும்போது கெட்டியாக கொரகொரப்பாக அரைப்பது வழக்கம். அதையும் நன்றாக தோசைக்கு போல் அரைத்து மெலிதாக வார்த்து எடுக்கலாம். அது செரிமானத்திற்கு நல்லது. குழந்தைகளுக்கு ஊட்டினாலும் ஒன்றும் பிரச்னை இருக்காது. சேர்க்கப்படும் பருப்புகளுக்கு தகுந்தவாறு காய்கறி, கீரைகளை சேர்த்து செய்தால் சுவை கூடும். அவற்றிற்கான டிப்ஸ் இதோ..
பச்சரிசி, புழுங்கல் அரிசி, ராஜ்மா, பாசிப்பயறு சேர்த்து அரைக்கும் அடைக்கு தனியா, கருவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, அரிசி வகைகள் சேர்த்து செய்யும் அடைக்கு பரங்கித்துருவல், முருங்கைக்கீரை சேர்த்து செய்தால் சுவை அசத்தம்.
வெள்ளை சுண்டல், சிவப்பு தட்டைப்பயிறு சேர்த்து செய்யும் அடையில் இஞ்சித் துருவல், பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து செய்யலாம். ஹெவியாக இருக்காது.
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு வரமிளகாய் சோம்பு, சீரகம் சிறுதானியங்களில் பாதி அளவு பருப்போடு சேர்த்து செய்யும் அடையில் ஏதாவது ஒரு கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து செய்யலாம்.
பச்சைப்பயரோடு அரிசி சேர்த்து செய்யும் அடையின் மேலாக தூவுவதற்கு இஞ்சித் துருவலையும், வெங்காயத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கிவிட்டு அடையின் மீது தூவி எடுக்கலாம்.
அரிசியுடன் மட்கி பருப்பை சேர்த்து செய்யும் அடை மாவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கைத் துருவி சேர்த்து செய்யலாம்.
சம்பா கோதுமை, சோளம், கருப்பு சுண்டல் சேர்த்த அடைக்கு வெங்காயத்தாள் சேர்க்க சுவை கிடைக்கும்.
தோசை மாவு புளித்துவிட்டால் அதனுடன் அடை மாவை கலந்து வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கிப்போட்டு வார்க்கலாம். புளிப்புச் சுவை குறைந்து அடை தோசை அருமையாக இருக்கும்.
கோதுமை, ராகி, சோயா இவற்றுடன் வெள்ளை பட்டாணி சேர்த்து ஊறவைத்து அரைத்து மல்லித்தழையை நறுக்கிப்போட்டு அடை வார்க்க சத்தான அடை கிடைக்கும்.
அரிசி வகைகளுடன் துவரம் பருப்பு சேர்த்து அடை செய்யும் பொழுது பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகை இடித்து சேர்த்து அடைவார்த்தால் பருத்த உடல் இளைக்கும்.
வெள்ளை தட்டைப் பயிறு வாயு நிறைந்தது.ஆதலால் அதை அரிசியில் சேர்த்து அரைத்து அடைவார்க்கும் பொழுது பொடியாக நறுக்கிய அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அடை வார்த்து சாப்பிட வாயுத்தொல்லை நீங்கும்.
கம்புவுடன் செஞ்சோளத்தை சேர்த்து அரைத்து அடை செய்யும்பொழுது தேங்காய் துருவலுடன் சிறிது வெல்லம் கலந்து அடை வார்க்கலாம்.
அரிசி வகைகளுடன் கொள்ளு, மசூர் தால் கலந்து அடை செய்யும் பொழுது எள்ளுப் பொடியும், பூண்டு பற்களை தட்டி போட்டும், சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்தும் அடை செய்ய கம கம ருசியுடன் சுவைக்கலாம்.
மாதக் கடைசியில் டப்பாக்களை காலி பண்ணவேண்டுமா அவைகளில் கைப்பிடி அளவு இருக்கும் பருப்புகளை ஒன்றாக சேர்த்து சிறுதானியங்களுடன் அரைத்து கேரட், பீன்ஸ், முட்டை கோஸ் போன்றவற்றை பொடியாக அரிந்து வதக்கி சேர்த்து அடை வார்த்தால் அனைவரும் விரும்பி உண்பர்.
கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு பொங்கல் அரிசி, சிவப்பு அரிசி, புழுங்கல் அரிசி , வர மிளகாய் ,சோம்பு சேர்த்து அரைத்தமாவில் சுட்ட அடையை அப்படியே சாப்பிடலாம்.