
1. தடிமனாக வெங்காய ஊத்தப்பம் ஊற்றும் போது தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் தோசை வெந்துவிடும். சுவையாகவும் இருக்கும்.
2. வெங்காய அடை செய்வதற்கு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மாவில் கலந்து அடை வாத்தால் சுவையும், ருசியும் தூக்கலாக இருக்கும்.
3. அடை மாவு அரைக்கும் போது அரிசி பருப்புடன், இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து அரைத்து அடை வார்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும்.
4. ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பு பொடி செய்து கலந்து தோசை வார்த்தால் வாசனை அருமையாக இருக்கும்.
5. தோசைக்கு மாவு அரைக்கும் போது உளுந்துடன் சிறிதளவு கடலைப்பருப்பை சேர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாகவும், முறுகலாக சுவையாகவும் இருக்கும்.
6. தோசைக்கு ஊற வைக்கும்போது ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரிசியுடன் சேர்த்து அரைத்து அந்த மாவில் தோசை வார்த்தால் சுவையான ஆரோக்கியமான தானிய தோசை தயார்.
7. தோசை மாவுடன் சிறிது ஜவ்வரிசியை ஊற வைத்து அரைத்து தோசை சுட்டால் தோசை பளபளவென்று முறுகலாக சுவையுடன் இருக்கும்.
8. குருமா செய்யும் போது சிறிது வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நைசாக அரைத்து குருமாவில் சேர்த்தால் குருமாவின் சுவை அபாரமாக இருக்கும்.
9. குருமா நீர்த்துவிட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்சை பொடித்து போட்டு குருமா செய்தால் நன்றாக கெட்டிப்படும். வித்தியாசமான சுவையில் இருக்கும்.
10. மெதுவடைக்கு அரைத்த மாவு நீர்த்து விட்டதா? வீட்டில் ரஸ்க் இருந்தால் மிக்ஸியில் உடைத்து போட்டு தூளாக்கி வடை மாவில் சேர்த்து கலந்தால் மாவு கெட்டியாகும். வடை சுடும்போது மொறுமொறுவென சுவையாக இருக்கும் .
11. தேங்காய் துருவலுடன் ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து தேங்காய் பர்பி செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
12. ஒரு தட்டில் தூவிய இட்லி மிளகாய் தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீரையும் கலந்து அந்த கலவையில் சூடான இட்லியை பிரட்டி எடுத்தால் பொடி இட்லி பிரமாதமாக இருக்கும்.
13. பூரி செய்ய 2 வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து பிசைந்து செய்தால் பூரி சுவையாக இருக்கும்.
14. ரோஜா இதழ்களை உலர்த்தி டீ தூளுடன் கலந்து டீ போட்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
15. புதினா, கொத்தமல்லி இலைகளை கிள்ளிவிட்டு தண்டினை தூர எறியாமல் கழுவி சுத்தம் செய்து சூப், கிரீன் டீ மற்றும் கசாயம் செய்யும் போது சேர்த்துக் கொண்டால் வாசனையாக இருக்கும்.
16. சர்க்கரை பொங்கல் செய்யும் போது பொங்கல் செய்து இறக்கியவுடன் ஒரு கப் தேங்காய் பால் ஊற்றி நன்கு கிளறி பின்பு பரிமாறினால் சுவையாக இருக்கும்.
17. தோசைக்கல்லில் சிறிது பெருங்காயத்தூளை பரவலாக தூவிவிட்டு துடைத்து விட்டு மாவை ஊற்றினால் கல்லில் ஒட்டாமல் தோசை எடுக்க வரும்.
18. தோசை மாவு 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் தோசை மிருதுவாக இருக்கும். ஆறிய பின் சாப்பிட்டாலும் தொண்டை அடைத்துக் கொள்ளாது.
19. முள்ளங்கி இலையை எண்ணெய் விட்டு வதக்கி காய்ந்த மிளகாய் விழுந்து பெருங்காயம் உப்பு சேர்த்து வறுத்து துவையல் செய்தால் சுவை அள்ளும்.
20. புளிக்குழம்பு, கார குழம்பு, சாம்பார் வைக்கும் போது தக்காளியை நறுக்கி வதக்கி போட்டு மிக்ஸியில் அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாக ருசியாக இருக்கும்.
21. பிரட் துண்டுகளின் மேல் வெண்ணெயை சீராக தடவ, வெண்ணையில் சிறிது பால் விட்டு நன்றாக குழைத்து பின் தடவினால் சுலபமாக சீராக தடவும் முடியும்.
22. சாம்பார், கூட்டு செய்யும் போது தேங்காய் இல்லை என்றால் சர்க்கரைவள்ளி கிழங்கு சிறிது அரைத்து சேர்த்தால் தேங்காய் அரைத்தது போல இருக்கும். கொழுப்பு சத்தும் குறைவாக இருக்கும்.