முத்தான மாதுளையில் மாஸான 3 ரெசிபிகள்!

Pomegranate Recipes
Pomegranate Recipes

அனைவரும் விரும்பி உண்ணும் மாதுளையைப் பயன்படுத்தி, மாதுளை பொரியல், மாதுளை ஸ்மூதி மற்றும் மாதுளை அல்வா ஆகிய 3 அசத்தலான ரெசிபிகளை எப்படி செய்வது என இந்தப் பதிவில் காண்போம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் பழமாக மாதுளம்பழம் இருக்கிறது. மாதுளையில் ஒரு உணவுப்பொருள் சமைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என் சிந்தித்துப் பாருங்கள். பழத்தில் உணவுப்பொருளா?

மாதுளையில் பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்பது பலரும் அறியாத தகவல். காரசாரமான பொரியல் சாப்பிட்டு பழகியவர்களுக்கு மாதுளம் பழத்தில் இனிப்பான பொரியல் என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கும். இருப்பினும், பொரியல் மட்டுமின்றி மாதுளையில் செய்யப்படும் மற்ற இரண்டு சுவையான ரெசிபிகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

மாதுளை பொரியல்:

தேவையான பொருள்கள்:

மாதுளை விதைகள் - 1 கப்

பச்சை மிளகாய் - 1

பெரிய வெங்காயம் - 1

சிறிதளவு துருவிய தேங்காய்

சிறிதளவு உளுந்தம் பருப்பு

கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை:

வாணலியில் எண்ணெயை ஊற்றி அது சூடான பிறகு உளுத்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்க வேண்டும். பிறகு மாதுளை முத்துகள் மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளற வேண்டும். அவ்வளவு தான் சுவை மிகுந்த, 'மாதுளை பொரியல்' தயாராகி விடும்.  

மாதுளை ஸ்மூதி:

தேவையான பொருள்கள்:

மாதுளை முத்துகள் - 1 கப்‌

கனிந்த வாழைப்பழம் - 1

ஊறவைத்த பாதாம் பருப்பு - 5

உலர் கருப்பு திராட்சை - சிறிதளவு

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் மாதுளை முத்துகளை எடுத்துக் கொண்டு, அதில் கனிந்த வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்த 5 பாதாம் பருப்பு மற்றும் சிறிதளவு உலர் கருப்பு திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து அரைத்தால், சுவையான ஸ்மூதி தயாராகி விடும். இதனைக் குடித்தால் வெகு நேரத்திற்குப் பசி எடுக்காமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மாதுளை– மகத்தான மருத்துவக் குறிப்புகள்!
Pomegranate Recipes

மாதுளை அல்வா:

தேவையான பொருள்கள்:

மாதுளை முத்துகள் - 1 கப்

முந்திரி - 50 கிராம்

கான்ஃபிளவர் - 4 தேக்கரண்டி

நெய் சிறிதளவு, சர்க்கரை சிறிதளவு

செய்முறை:

முதலில் நெய்யில் முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், 4 தேக்கரண்டி கான்ஃபிளவரில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மாதுளை முத்துகளை அரைத்து வடிகட்டி, அதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்து கிளற வேண்டும். பிறகு கலக்கி வைத்த கான்ஃபிளவரை இதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவை கெட்டியான பதத்திற்கு வந்ததும், வறுத்த முந்திரியை இதில் சேர்த்து கிளறி விட்டால் சுவை மிகுந்த மாதுளை அல்வா தயாராகி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com