
மோர்க்குழம்பு செய்யும்போது மாம்பழத் துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். மிதமான இனிப்புச் சுவையுடன் மோர்க்குழம்பு கிடைக்கும்.
மோர்க்குழம்பு கொதித்து இறக்கும்போது சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி இறக்கினால் மோர்க்குழம்பின் சுவை ஊரைத்தூக்கும்.
வெண்டை, குடைமிளகாய், கோவைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களை வதக்கி, மோர்க் குழம்பில் சேர்க்கும்போது, சிறிது உப்புடன் சேர்த்து வதக்கினால் காய்களில் உப்பு ஏறி சுவை கூடும்.
முருங்கைப் பூவைத் தேங்காய் எண்ணையில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மிகவும் வாசனையுடன் இருக்கும்.
மாம்பழக்கொட்டையை மட்டும் போட்டு, மோர்க்குழம்பு செய்ய, மாம்பழ வாசனையுடன் அதன் ருசி அருமையாக இருக்கும்.
அதுபோல் மோர்க்குழம்பு செய்யத்தேவையான அளவு புளித்த மோர் இல்லையென்றால், புளிப்பான மூன்று தக்காளிகளை, மோர்க்குழம்புக்குத் தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்பு சுவை வந்துவிடும்.
மோர்க்குழம்புக்கு அரைத்து விடும்போது சிறிது ஓமம் சேர்த்து அரைத்தால் மோர்க்குழம்பின் வாசனையே அலாதிதான்.
மோர்க்குழம்பு திக்காக வர முதலில் மோர் தண்ணீராக இருக்கக்கூடாது. மல்லி, கடலைப்பருப்பு, இஞ்சி, தேங்காய்த் துருவல் நான்கையும், நன்றாக கெட்டியாக அரைத்துக் கொதிக்கவிட்டால் மோர்க்குழம்பு திக்காக இருக்கும்.
மீதமான தேங்காய் சட்னியை, கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதிவிட்டால் சுவையான மோர்க்குழம்பு தயார்.
மோர்க்குழம்பில் போட காய் இல்லையென்றால் இரண்டு சால்ட்பிரட் ஸ்லைஸ்களை துண்டுகளாக வெட்டி எண்ணையில் பொரித்து,குழம்பை பரிமாறுவதற்கு முன் அதில் போடுங்கள். மோர்க்குழம்பு வித்தியாசமான சுவையில் இருக்கும்.
மோர்க்குழம்பு மிச்சம் இருக்கிற தா? அதில் பாதியளவு அரிசிமாவைக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு மூன்று மோர் மிளகாய்கள் ஆகியவற்றைத்தாளித்து, கரைத்து வைத்துள்ள மோர்க் குழம்பை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கிளறினால் சுவையான மோர்க்களி தயார்.
ஈஸியாக மோர்க்குழம்பு செய்யவேண்டுமா? இரண்டு மிளகாய்வற்றல், கால்கப் துருவிய தேங்காய், அரைஸ்பூன் ஜீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் கடைந்த தயிரில் அரைத்து வைத்துள்ள விழுது, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டால் சுவையான மோர்க்குழம்பு ரெடி.