

ஓமவல்லி பஜ்ஜி
தேவை:
ஓமவல்லி இலை - 10,
கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - அரை கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து... உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்க வும். ஓமவல்லி இலைகளை சுத்தம் செய்து, மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண் ணெயில் பொரித்தெடுக்கவும். கம கமக்கும் ஓமவல்லி பஜ்ஜி ரெடி.
ஓமவல்லி ரசம்
தேவை:
ஓமவல்லி இலைகள் - ஒரு கைப்பிடி,
புளி - எலுமிச்சை அளவு, பூண்டுப் பற்கள் - மூன்று, தக்காளி - இரண்டு, பச்சை மிளகாய் - இரண்டு,
காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
தனியா, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், தனியாவை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளவும். புளியைத் தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், நன்றாக வதக்கவும்.
பிறகு பெருங்காயத்தூள், அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்து வதக்கி, கரைத்துவைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போது கொத்தமல்லித்தழை போட்டு பின்னர் பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்து ஊற்றி இறக்கினால் தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம் ரெடி.
ஓமவல்லி துவையல்
தேவை:
ஓமவல்லி இலை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வறுத்த மிளகாய் – 3
புளி – சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
உளுத்தம் பருப்பு, மிளகாய் இரண்டையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். பின்னர் அதே வாணலியில் புளி, ஓமவல்லி இலைகளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, உப்பு சேர்த்து கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சுவையான ஓமவல்லி துவையல் ரெடி.
இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.
ஓமவல்லி சப்பாத்தி
தேவை:
கோதுமை மாவு - 2 கப் பொடியாக நறுக்கிய ஓமவல்லி இலைகள் - ஒரு கப்
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, ஓமவல்லி இலைகள், உப்பு, கேரட் துருவல், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெதுவாகத் தேய்க்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஓமவல்லி சப்பாத்தி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரி தயிர்ப் பச்சடி வெகு பொருத்தம்.