
வீட்டில் எல்லோருக்கும் பிடித்த இடம் கிச்சன். அங்குதான் நாம் சாப்பிடுவதற்கான சமையல் தயார் செய்யும் இடமாச்சே அதனால் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் வீட்டில் வெரைட்டி வெரைட்டியாக சமையல் செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது? சமையலறையில் நீங்கள் சமையல் செய்யும்போது இப்படி எல்லாம் கூட செய்தால் இதெல்லாம் கிடைக்குமா என ஆச்சரியப்படும் அளவுக்கு இப்பதிவில் 14 யோசனைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் மூன்றையும் மெலிதாக நறுக்கி உப்பு சேர்த்து, அதில் எலுமிச்சை பழத்தைப் பிழியவும், எலுமிச்சையைச் சின்னதாக தறுக்கியும் போடலாம். ருசியான திடீர் ஊறுகாய் தயார்.
பாகற்காயின் விதைகளை நீக்கிவிட்டுச் சிறுவில்லைகளாக மெலிதாக நறுக்கவும். உப்பு, கீறிய பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு, எலுமிச்சைச்சாறு விட்டுக் கலந்து, ஒரு வாரம் வெயிலில் வைத்து எடுக்கவும். காய் மூழ்கும்வரை எலுமிச்சைச்சாறு விடவும். இந்த ஊறுகாயில் கசப்பும் குறைந்திருக்கும். சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள நன்றாகவும் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
அரிசியையும், பாசிப்பருப்பையும் ஊறவைத்து அரைத்து உப்பு பெருங்காயம் போட்டுத் தோசை வார்த்தால் மிகவும் சுவையான, சத்தான தோசை கிடைக்கும்.
பழைய புளியைக் கரைத்துக் குழம்பு வைக்கும்போது கருப்பாகிவிடும். இதைத் தவிர்க்க அரிசி களைந்த தண்ணீரில் புளியைக் கரைக்கலாம். புதிய புளியில் குழம்பு வைத்தது போலவே இருக்கும்.
வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜிபோல, பனீரையும் சரியாக வெட்டி மாவில் முக்கி எடுத்து பஜ்ஜி செய்யலாம். வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
கேசரி செய்வதற்குப் பொதுவாக ரவையைப் பயன்படுத்துவார்கள். அவலில் செய்தால் வெகு ருசியாக இருக்கும். அவலை நன்கு மிக்ஸியில் பொடி செய்து பாருங்கள். ரவைபோல் வரும், ரவையில் செய்த கேசரியைவிட, இந்த அவல் பொடியில் செய்த கேசரி சூப்பராக இருக்கும். நெய்யும் குறைவாகவே செலவாகும்.
சப்பாத்தி மாவு இறுக்கமாக இருந்தால் சிறிது எலுமிச்சைச்சாறு விட்டுப் பிசையவும். இளகி, பக்குவமாகப் பிசைய வரும். சப்பாத்தியும் ருசிக்கும்.
சப்பாத்தி மாவில் வெந்தயக்கீரை போட்டுப் பிசைந்து மேத்தி சப்பாத்தி செய்வதுபோல, புதினாவையும் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையா? ஒரு கப் கடலை மாவைக் கரைத்துவிட்டு, அதில் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போது, அத்துடன் வரமிளகாயையும் சேர்த்து உடைத்துவிட்டால், மிளகாய் வீணாகாது. ருசியும் கூடும்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். அதில் இருக்கும் காய்களை மோரில் ஊறவைத்து, காயவைத்தால் மணத்தக்காளி வற்றல் கிடைக்கும். இதை வறுத்ததும் சாப்பிடலாம். குழம்புக்கும் போடலாம்.
வெங்காயப் பச்சடி சாப்பிட்டு போரடிக்கிறதா? முள்ளங்கியைக் கேரட் துருவியில் நீளவாக்கில் துருவி, மிதமான நெய்யில் வதக்கிச் சேருங்கள். சுவையாக இருக்கும். வெயிலுக்கு மிகவும் நல்லது.
சாம்பார், கீரை, புளிப்புக் கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் நேரத்தில் துளி வெந்தயப்பொடி தூவி இறக்கலாம். நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.
வித்தியாசமான முறையில் பருப்புப்பொடி செய்ய ஆசையா? பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு. கொப்பரைத் தேங்காய் வறுத்துச் சேர்த்து பருப்புப்பொடி அரைக்கலாம். பொடி மிகவும் வாசனையாகவும் இருக்கும். இட்லிக்குத் தொட்டுக்கொண்டாலும் ருசிக்கும்.