

பைனாப்பிள் மோர்க்குழம்பு
தேவை:
அன்னாசிப் பழத்துண்டுகள் - 12
தேங்காய்த் துருவல் - கால் கப்
தயிர் – 4 கரண்டி
பச்சைமிளகாய் - 4 பெரியது
ஊறவைத்து அரைக்க:
துவரம்பருப்பு - 4 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெயிட்டு கடுகு தாளித்து, நறுக்கிய அன்னாசிப் பழத் துண்டுளைப் போட்டு வதக்கவும். ஓரளவு வதங்கின பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி, போட்டு வேக விடவும்.
ஊற வைத்த பொருட்களை தேங்காயுடன் அரைத்து விட்டு, பின்னர் தயிரையும் சேர்த்து மீண்டும் அரைத்து, வெந்து கொண்டிருக்கும் தண்ணீரில் கொட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
நுரைத்து பொங்கி வரும் வரை அடி பிடிக்காமல் கிளறி வர வேண்டும். துவரம்பருப்பின் பச்சை வாடை மறைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு மீண்டும் சிறிதளவு கடுகு தாளித்து இறக்கி வைக்க, சுவையான பைனாப்பிள் மோர்க்குழம்பு தயார்.
மிளகு மோர்க்குழம்பு
தேவை:
கெட்டி மோர் - 500 மில்லி, மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம், அரிசி - தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விட்டு... சிறிதளவு எண்ணெயில் கடுகை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு மோர்க்குழம்பு தயார்.
மாம்பழ மோர்க்குழம்பு
தேவை:
நறுக்கிய மாம்பழம் – ஒரு கப்
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு.
மஞ்சள்தூள் – சிறிது.
அரைக்க:
தேங்காய் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – கால் டீஸ்பூன்
பச்சரிசி – 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை:
மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க் குழம்பில் ஊற்றி இறக்கவும். அல்டிமேட் சுவையில் மாம்பழ மோர்க்குழம்பு தயார்.
வாழைத்தண்டு மோர்க்குழம்பு
தேவை:
நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப்
கடைந்த தயிர் - 4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைத்தண்டு மோர்க்குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அதேபோல் கடலைப்பருப்பையும் வேகவைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து பச்சை மிளகாய், தனியாத்தூள், சீரகம், கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் தயிர், உப்பு, வேகவைத்துள்ள கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வாழைத்தண்டு கலவையை சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு தயார்.