

விசேஷங்கள், பார்ட்டிகள் மட்டுமல்ல… விருந்தினர் வருகையின் போதும் இன்று சாலட் தயாரிப்பது சகஜமாகி விட்டது. கொஞ்சமே கொஞ்சம் சிரத்தை எடுத்தால் நீங்கள் தயாரிக்கும் சாலட் சபாஷ் சொல்ல வைக்கும்.
சாலட் செய்வதற்கு காய்கள் முற்றியதாக இல்லாமல் இளசாக இருப்பது நன்று.
மார்க்கெட்டிற்கு வந்த அன்று புதிதாக இருக்கும். அப்போது வாங்கிச் செய்வது மிக நன்று.
முள்ளங்கி போன்ற காய்களில் செய்யும்போது, காலை அல்லது மதியம் சாலட் செய்யுங்கள். சிலருக்கு நெஞ்செரிச்சல் வரலாம். பகல் நேர உழைப்பில் அது, தவிர்க்கப்படும்.
கோஸ், புரோக்கோலி போன்ற கடினமான காய்களை சிறிதளவே சேர்க்க வேண்டும்.
காய்களுடன் விருப்பமான பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். சுவை கூடும்.
சாலட் செய்யும்போது முளைக்கட்டிய பயறு வகை களையும் சேர்த்தால், உடலுக்குத் தேவையான விட்டமின், தாதுப்பொருள் கிடைக்கும்.
சாலட்டில், புதினா, மல்லி மட்டுமல்ல, வெங்காயத்தாளை துண்டுகளாக கட் பண்ணி கலந்தால் குட்டீஸைக் கவரும்.
பீட்ரூட் போன்ற கடினமான காய்களை துருவிச் சேர்த்தால் வயதானவர்களுக்கு மெல்லுவதற்கு தோதாக இருக்கும்.
ருசிக்காக லெமன் பிழிவதற்குப் பதிலாக புளிப்பில்லா மாங்காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.
அதுபோல் மிளகு பவுடருக்குப் பதிலாக இஞ்சியை துருவி சேர்க்கலாம்.
நீர்ச்சத்துள்ள வெள்ளரிக்காயை நறுக்கிச் சேர்க்காமல், ஸ்லைஸ்களாக்கி, மேலே தூவி விடலாம்.
காய்களை கட் பண்ணி, மிளகுபொடி, உப்பு, லெமன் ஜூஸ் கலந்து,குலுக்கி வைத்து அரைமணி நேரம் கழித்து பரிமாற ருசியில் குறையிருக்காது.
சாலட் தயாரித்த மூன்று மணி நேரங்களுக்குள் காலி பண்ணிடணும். நீண்ட நேரமிருந்தால் நீர்த்துவிடும்.
லஞ்ச் பாக்ஸில் சாலட் கொடுத்து விடாதீர்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாளில் பிரஷ்ஷாக செய்தால் குழந்தைகளுக்கு உடல் பலம் கூடும்.
கடைசியாக ஒரு யோசனை. சாலட் மீந்துவிட்டதா? அதில் தேவையான உப்பு, வற்றல் பொடி சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துப் போட்டுக் கலக்கி, ஊறுகாயாக தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம்.