
காலையில் டிபன் செய்ய நேரம் குறைவாக இருந்தால் இட்லி, அல்லது தோசையை செய்து விட்டு இந்த பொடி வகைகள் வைத்திருந்தோமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பூண்டுப்பொடி
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ½ கப்
கடலைப்பருப்பு – ¼ கப்
மிளகாய் வற்றல் – 10
பூண்டு பற்கள் – 15
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின்னர் மிளகாய் வற்றலை தனியாக வறுக்கவும் பிறகு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, பூண்டு பற்களை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதன் பின் கறிவேப்பிலையை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். எல்லா பொருட்களையும் குளிர விட்டு, உப்பு சேர்த்து ஒரு மிக்ஸியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
சூப்பரான பூண்டு பொடி இட்லி மற்றும் தோசைக்கு துணையாக சுவையாக இருக்கும்.
எள்ளுப்பொடி
தேவையான பொருட்கள்:
எள் (வெள்ளை அல்லது கருப்பு) – ½ கப்
உளுத்தம்பருப்பு – ¼ கப்
மிளகாய் வற்றல்– 8
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
அனைத்து பொருட்களையும் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும். இந்த எல்லா பொருட்களையும் சூடு அறியப் பிறகு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
சுவையான எள்ளுப்பொடி இட்லி மற்றும் தோசைக்கு அற்புதமாக இருக்கும்.
பிரண்டைப் பொடி
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ½ கப்
கடலைப்பருப்பு – ¼ கப்
பிரண்டை காய் – ½ கப் (நன்றாக தோல் சீவி நறுக்கியது)
சிவப்பு மிளகாய் – 10
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் ½ தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் பிரண்டை காய்களை நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதன் பின் மிளகாய் வற்றல், கறிவேப்பிலையை ஒரே சமயம் நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும். எல்லா பொருட்களையும் குளிர வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும். சுவையான பிரண்டைப் பொடி இட்லி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த சேர்க்கையாக இருக்கும்.
வல்லாரைப்பொடி
தேவையான பொருட்கள்:
வல்லாரை கீரை – 3 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
உளுத்தம்பருப்பு – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 8,
புளி – சிறு உருண்டை,
பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய் – வறுக்க.
செய்முறை:
வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போகக் காயவைக்கவும். பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பருப்புகளை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். வல்லாரை கீரையை வெறும் வாணலியில் சிறு தீயில் வறுத்தெடுக்கவும். புளியையும் வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியவுடன், முதலில் பருப்பு, மிளகாய், உப்பு, புளி.. ஆகியவற்றை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக வல்லாரை இலைகளையும் போட்டு பொடித்தெடுக்கவும்.
குறிப்பு: வல்லாரை, கீரையை வதக்காமல் வெயிலில் காயவைத்தும் உபயோகப்படுத்தலாம்.