
உணவுப் பொருள்களை சமைப்பதற்கு மட்டுமல்லாமல் மீண்டும் சூடாக்கி உபயோகிப்பதற்கு ஏற்ற ஒரு சாதனம் மைக்ரோவேவ் அவன். ஆனால் அவற்றில் சில உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அவை என்ன? ஏன் அவற்றை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது என்பதற்கான காரணங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மைக்ரோவேவில் ரிஹீட் செய்யக்கூடாத 7 உணவு வகைகள்:
1. வேகவைத்த முட்டைகள்:
வேகவைத்த முட்டைகளை மைக்ரோவேவ் அவனில் வைத்து மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. ஏனென்றால் முட்டையின் மஞ்சள் கருவின் உள்ளே நீராவி படிந்து அது வெடிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் தீக்காயங்களையும் உண்டாக்கும். எனவே வேகவைத்த முட்டைகளை ஆறினாலும் அப்படியே சாப்பிடுவது நல்லது. இல்லை என்றால் கேஸ் அடுப்பில், வாணலியில் தண்ணீரில் ஊற்றி மெதுவாக சூடுபடுத்தி உண்பது நல்லது.
2. அரிசி சாதம்:
சமைத்த அரிசி சாதத்தில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாவின் வித்துகள் இருக்கலாம். சமைத்த சாதத்தை அறை வெப்ப நிலையில் அதிக நேரம் வைத்திருந்தால் இந்த பாக்டீரியாக்கள் பெருகி நச்சுக்களை உருவாக்கும். மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து சாதத்தை மீண்டும் சூடு படுத்தும்போது அதில் உள்ள நச்சுகள் கொல்லப்படாமல் அங்கேயே தங்கிவிடும். அந்த உணவு சாப்பிட ஏற்றதாக அல்லாமல் அதில் நச்சுத்தன்மை சேர்ந்துவிடுகிறது. மீந்த சாதத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து கேஸ் அடுப்பில் மீண்டும் அதை நன்றாக சூடுபடுத்தி உண்ணலாம்.
3. கோழிக்கறி:
இது புரத சத்து நிறைந்ததுதான். ஆனால் மைக்ரோவேவ் அவனில் வைத்து சீரற்ற முறையில் சூடுபடுத்தப் படும்போது கோழிக்கறியில் உள்ள புரத அமைப்பு மாறக்கூடும். அது கறியை வறண்ட ரப்பர் போன்று மாற்றும். இதை உண்டால் செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஒருபோதும் கோழிக்கறியை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடுபடுத்தக் கூடாது. அதை சாலட் அல்லது சாண்ட்விச்சில் வைத்து பயன்படுத்துவது நல்ல வழி.
4. இலைக் கீரைகள்:
கீரைகள் மற்றும் இலைக்கீரைகளில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் அதிகம் உள்ளன. இவற்றை மைக்ரோ வேவில் வைத்து சூடு படுத்தும்போது நைட்ரேட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான காரணிகளாக மாறுகின்றன. எனவே இவற்றை மைக்ரோவேவ்வில் சூடு படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
5. உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை சமைத்த பின்பு நீண்ட நேரம் அப்படியே வைத்திருந்தால் அதில் ஒரு விதமான பாக்டீரியாவின் வளர்ச்சி ஏற்படும். இது உருளைக் கிழங்கை விஷமாக மாற்றும் தன்மை உடையது. மைக்ரோவேவில் மீண்டும் உருளைக்கிழங்கை சூடு படுத்தும்போது நச்சுக்கள் வெளியேறாது. இவற்றை உண்டால் உடலுக்கு கடும் தீங்கு உண்டாகும்.
6. கடல் உணவுகள்:
கடல் மீன்களை மைக்ரோவேவ் அவனில் வைத்து மீண்டும் சூடு படுத்துவது நல்லதல்ல. மீனின் மென்மையான அமைப்பை முரட்டுத்தனமாக மாற்றும். வறண்டு ரப்பர்போல மாற்றிவிடும். மேலும் கடுமையான விரும்பத்தகாத வாடையை ஏற்படுத்தும். கடல் உணவுகளை பிரிட்ஜில் வைத்து மீண்டும் அப்படியே சாப்பிடுவது அல்லது அடுப்பில் வைத்து மீண்டும் மெதுவாக சூடுபடுத்தி உண்பது நல்லது.
7. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளில் நைட்ரேட்டுகள் உள்ளன. அவற்றை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடுபடுத்தும்போது அவை புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரோசைமன்களாக மாறிவிடும். மேலும் இது இதயநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே மைக்ரோவேவில் வைத்து நேரடியாக சூடுபடுத்தவே கூடாது.
அவனில் வைத்து சூடுபடுத்தி சாப்பிட ஏற்ற உணவுப் பொருள்கள்;
சூப்புகள், குழம்பு வகைகள், கேசரோல்கள், சாஸ், கிரேவிகள், குயினோவா போன்ற தானியங்கள், ப்ராக்கோலி, கேரட், சோளம், பச்சை பீன்ஸ், சாஸுடன் கூடிய பாஸ்தா, மஃபின்கள், கேக், பர்கர்கள் போன்றவற்றை மைக்ரோவேவில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி உண்ணலாம்.