
1. கேரளா ஸ்பெஷல் சுவையான தேங்காய்ப்பால் கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 6 ஸ்பூன்
முந்திரிபருப்பு - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்பொடி - 1 ஸ்பூன்
செய்முறை: அடிகனமான வாணலியை அடுப்பில் ஏற்றி 1 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மிதமான தீயில் ரவையை வறுக்கவும். தேங்காயை துருவி மிக்ஸியில் அடித்து முதல் பால் 1 கப் எடுத்து தனியாக வைத்து விட்டு, இரண்டாம் பால் 2 கப் எடுத்து அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் போது கலக்கி விட்டு அதில் வறுத்த ரவையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் சர்க்கரையை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு கலந்து, ஏலக்காய்பொடி சேர்த்து மீடியமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும். அத்துடன் உருகாத நெய் சேர்த்து நெய் கலந்ததும் வறுத்து வைத்த முந்திரி பருப்பை போட்டு கிளறி கெட்டியானதும், முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி இறுகி வந்ததும் நெய் தடவிய பவுலை எடுத்து அதில் கேசரியை நிரப்பி ஆற வைக்கவும். நன்கு ஆறியப் பிறகு ஒரு தட்டில் தட்டி வெட்டி எடுத்து சாப்பிட சுவை மிகவும் 'செம'யாக இருக்கும்.
****************************
2. சோள அடை:
தேவையான பொருட்கள்:
இனிப்பு சோளம் (Sweet corn) - 2
கோதுமைமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
வரமிளகாய் இடித்த தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி (நறுக்கியது) - 1/4 கப்
துருவிய தேங்காய் - ¼ கப்
செய்முறை: சோளத்தை முதலில் சீவலில் சீவி வைத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் வரமிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து கையால் நன்கு கிளறி விரவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதன் மீது விரவி வைத்த மாவை உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி வட்டமாக தட்டி சூடான தவாவில் போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சுவையும், சத்தும் கூடிய சோள அடை தயார்.
**********************
3. வெங்காயச் சம்மந்தி :
தேவையான பொருட்கள்:
சின்னவெங்காயம்- 1 கப்
தக்காளி - 1
புளி - சிறிது
பூண்டு - 8 பல்
வரமிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மீடியமான தீயில் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, வரமிளகாய் போட்டு நன்கு வதங்கியதும் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியில் மீதி இருக்கும் எண்ணெயுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்த விழுதை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.