
பலாப்பழ பிரியாணி
தேவை:
பலாச்சுளை - ஒரு கப்
பாசுமதி அரிசி – 2 கப்,
பிரியாணி மசாலா - ஒன்றரை டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2,
பிரிஞ்சி இலை – 2,
முந்திரி,
உலர் திராட்சை தலா – 2 டீஸ்பூன்,
வறுத்து எடுத்த வெங்காயம் - ஒரு கப்,
ரீஃபைண்ட் ஆயில், நெய் தலா – 2 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லித்தழை - தலா அரை கப்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ் பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசியை முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, முந்திரி உலர்திராட்சையையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய பலாச்சுளை சேர்த்து, மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
வறுத்த வெங்காயம், நெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை இதில் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கவும். சுவையான பலாப்பழ பிரியாணி ரெடி.
********
பலாப்பழ அல்வா
தேவை:
பலாச்சுளை – ஒரு கப்
வெல்லத்தூள் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
உடைத்த முந்திரி – அரை கப்
நெய் – 10 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, உடைத்த முந்திரி சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பலாச்சுளைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விடாமல் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூள் சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.
பிறகு, மீண்டும் வெல்லக்கரைசலை அடுப்பிலேற்றி கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இதனுடன் அரைத்த பலாச்சுளை விழுது, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். மேலே வறுத்த முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும். அல்டிமேட் சுவையில் பலாப்பழ அல்வா ரெடி.
*******
பலாப்பழ இனிப்பு இட்லி
தேவை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ் - தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப்,
பலாச்சுளைகள் - 8, வெல்லப்பாகு - தேவையான அளவு,
நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை:
தேங்காய்த் துருவல், பலாச்சுளையை சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ், வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை கலந்து, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கலந்து வைக்கவும். அரைமணி நேரத்துக்குப் பிறகு, மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான பலாப்பழ இனிப்பு இட்லி ரெடி.
*********
பலாப்பழக் கொழுக்கட்டை
தேவை:
அரிசி மாவு - 1/2 கிலோ,
பலாச்சுளைகள் - 10,
வெல்லம் - 1/4 கிலோ,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
தேங்காய் துருவல் - 1/4 கப்,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
வாழையிலை, உப்பு - தேவைக்கு
செய்முறை:
1 கப் அரிசி மாவுக்கு 1 கப் என்கிற அளவில் தண்ணீர் எடுக்கவும். அதில் உப்பு போட்டு கொதிக்கவிட்டு மாவை கொட்டி கட்டியில்லாமல், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிண்டவும். மாவை ஆறவைத்து, சொப்பு போல் செய்யவும். வெல்லத்தை பாகு செய்து தேங்காய் துருவல், பலாப்பழ விழுது (மிக்ஸியில் அரைத்தது), ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிண்டவும். பிறகு இறக்கி, ஆறவைத்து, உருண்டைகளாகச் செய்து தயாராக உள்ள சொப்பில் வைத்து வாழையிலையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூப்பர் சுவையில் பலாப்பழ கொழுக்கட்டை தயார்.