
மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு தருவது, பசியைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுடன் மனிதர்களின் மன நலத்தையும் மேம்படுத்தும் பணியை செய்வது நமது குடலில் உள்ள "நுண்ணுயிரி குழுமம்"(micro biome) தான். இவை குடலில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள். இந்த வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள் நன்றாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பொதுவாக குடல் ஆரோக்கியம் என்பது சருமம், மூளை என அனைத்திற்கும் நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே மனநலம் காக்க குடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அன்றாட உணவில் புளித்த உணவுகளைச் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புளித்த உணவுகள் என்னென்ன மற்றும் அவை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
பொதுவாக புளிக்கவைக்கப்பட்ட உணவுகளானது நொதித்தல் என்ற இயற்கையான செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டவையாகும். இதில் ஈஸ்ட், பாக்டீரியா அல்லது பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள், சர்க்கரை போன்ற உணவுக் கூறுகளை வாயு, அமிலம் போன்ற எளிய சேர்மங்களாக உடைகிறது. இந்த செயல்முறையானது உணவைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் மேம்படுத்துகிறது. இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் நுண்ணுயிரிக்கு நன்மை பயக்கும். மேலும் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவுகிறது.
புளித்த உணவுகளில் நிறைந்துள்ள புரோபயாடிக்குகள், என்சைம்கள் போன்றவை குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வைட்டமின்கள் பி, கே, இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில் நொதித்தல் செயல்முறையானது ஊட்டச்சத்துக்களின் செரிமானத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், குறிப்பிடத்தக்க பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த உணவுகள் செரிமானத்தின் போது ப்யூட்ரேட் போன்ற குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது. இந்த கொழுப்பு அமிலங்களில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
புரோபயாடிக் நிறைந்த புளித்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படுத்தப் படுகிறது. ஆய்வு ஒன்றில் நொதித்தல் செயல் முறையானது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் செரிமானத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனவே புளித்த உணவுகள் உணவை மிகவும் திறம்பட உடைக்க உதவுவதால், இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்னைகளைத் தடுக்கிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு புளித்த உணவுகள் எடுத்துக்கொள்வதற்கான மற்றொரு காரணம், அது குடலை வலிமையாக்குவதாகும். புளித்த உணவுகளில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள், வைரஸ்களுக்கு எதிராக வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புளித்த உணவுகள்
தயிர்; நேரடி புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் குடல் தாவர சமநிலையை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது செரிமானம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்திக்கு உதவுகிறது. தொடர்ந்து தயிர் மற்றும் மோர் சாப்பிட்டு வருகின்றவர் களுக்கு குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் மாசேசூட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பழையசோறு: இது ஒரு சிறந்த புரோபயாடிக் உணவு பழைய சாதத்தில் இரவு 10 மணிக்கு நீர் ஊற்றினால் அதிலிருந்து 18 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.பழைய சோற்றை மண் பானையில் ஊற்றி வைத்தால் பலன் அதிகம் "பி' காம்பிளக்ஸ் வைட்டமின் அதிகரிக்கும், பழைய சோற்றில் உருவாகும் பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுவதுடன், சிறுகுடல் பிரச்னைகளையும் தடுக்கும்.பழைய சோறு நொதித்தல் மூலம் அதில் வைட்டமின் பி6,பி12 அதிகரிக்கிறது.
இட்லி மாவு ; இது புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகின்றன. இவை குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
புளித்த ஊறுகாய் - இயற்கையாகவே புளித்த ஊறுகாய் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.