தூதுவளையில் 4 ருசியான ரெசிபிகள் - ஆரோக்கியமான விருந்து இதோ!

A healthy feast
A healthy feast
Published on

தூதுவளை மசாலா தோசை

தேவை:

தோசை மாவு – 100 முதல் 125 மி.லி.,

நல்லெண்ணெய் (தோசைக்கு) – 1/2 டீஸ்பூன்,

தூதுவளை இலைகள் – 15 முதல் 20,

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 25 கிராம்,

நறுக்கிய வெங்காயம் – 20 கிராம்,

நறுக்கிய பச்சை மிளகாய் – 2,

இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,

வெந்தயம் – 2 கிராம்,

மஞ்சள் தூள் – சிறிதளவு,

கடலைப் பருப்பு – 2 கிராம்,

மிளகுத் தூள் – 2 கிராம்,

கொத்தமல்லி இலை – சிறிதளவு,

நெய் – 1 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தூதுவளை இலைகளை தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். கடாயில் நெய்யை ஊற்றி அதில் தூதுவளை இலைகளை வதக்கவும். வதங்கியவுடன் அடுப்பை அணைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

இத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அத்துடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கை போடவும். நன்கு கிளறி, அத்துடன் மிளகுத் தூள் சேர்த்து, பிறகு அதில் வதக்கிய தூதுவளை, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். தோசை வார்த்து அத்துடன் தூதுவளை மசாலாவை வைத்து, சூடாகப் பரிமாறவும். அல்டிமேட் சுவையில் தூதுவளை மசால் தோசை ரெடி.

தூதுவளை ஊறுகாய்

தேவை:

தூதுவளை இலை – 1 கைப்பிடி

புளி – சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

வெந்தயத்தூள் – 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

கடுகு – 1/2 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிது

செய்முறை:

தூதுவளை இலைகளை நன்கு கழுவி நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய தூதுவளை இலை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை மெதுவாக வதக்கவும்‌ புளி, மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கலவை சுருண்டு எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும். இறக்கி குளிர்ந்ததும் பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். சுவையான தூதுவளை ஊறுகாய் ரெடி.

இதையும் படியுங்கள்:
ருசியான கொண்டைக்கடலை சட்னி முதல் கட்லெட் செய்வது எப்படி?
A healthy feast

தூதுவளை துவையல்

தேவை:

தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு,

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மீதமான தீயில் வைத்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். தூதுவளை இலையையும் வாணலியில் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு இவற்றை ஒன்று சேர்த்து… உப்பு, புளி, பெருங்காயத் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். சத்தான, சுவையான தூதுவளை துவையல் ரெடி.

தூதுவளை கூட்டு

தேவை:

தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம்,

தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்,

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி, இடுப்பு வலியா? வாரத்துல 2 நாள் இத சாப்பிடுங்க, குதிரை பலம் கிடைக்கும்!
A healthy feast

செய்முறை:

தேங்காய்த் துருவல், தோல் சீவிய இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். தூதுவளைக்கீரையை ஆய்ந்து, முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வேகவிடவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து, எல்லாம் ஒன்றாக கலந்து கொதி வந்ததும் இறக்கவும். சுவையான தூதுவளை கூட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com