மூட்டு வலி, இடுப்பு வலியா? வாரத்துல 2 நாள் இத சாப்பிடுங்க, குதிரை பலம் கிடைக்கும்!

Raagi Murungai Adai
Raagi Murungai Adai
Published on

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் ஒரே பிரச்னை 'எலும்பு வலி'. மூட்டு வலி, முதுகு வலி என்று ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட, நம் பாட்டி வைத்தியமான உணவே மருந்து முறையை கையில் எடுப்பது சிறந்தது. கால்ஷியம் சத்து நிறைந்த கேழ்வரகு மற்றும் இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை இரண்டும் சேரும்போது, அது உடலுக்குத் தரும் வலிமைக்கு ஈடு இணையே இல்லை. 

பலருக்கு ராகி களி அல்லது கூழ் குடிக்கப் பிடிக்காது. ஆனால், இப்படி காரசாரமான அடையாகச் செய்து கொடுத்தால், வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட இரண்டு அடை அதிகமாகக் கேட்பார்கள். வாருங்கள், இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு - 2 கப்

  • முருங்கைக்கீரை - 1 கைப்பிடி அளவு

  • பெரிய வெங்காயம் - 2

  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3 

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • மிளகு - ½ டீஸ்பூன்

  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

  • துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - சுடுவதற்கு.

செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், தட்டிய மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதோடு சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையைச் சேர்க்கவும். 

கீரையை முழுதாகப் போடுவதை விட, லேசாக அரிந்து போட்டால் அடை தட்டும்போது வசதியாக இருக்கும். சிலர் கீரையை வதக்கிச் சேர்ப்பார்கள், ஆனால் பச்சையாகச் சேர்த்தால்தான் அதன் முழுச் சத்தும் கிடைக்கும், வாசனையும் நன்றாக இருக்கும்.

இப்போது தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பே, இந்த வெங்காயம், கீரை மற்றும் உப்பை மாவோடு நன்கு கைகளால் கலந்து விடவும். வெங்காயத்தில் உள்ள நீர் மாவில் இறங்கும். அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரைத் தெளித்து பிசையவேண்டும். 

சப்பாத்தி மாவு போல கெட்டியாகவும் இருக்கக்கூடாது, தோசை மாவு போல தண்ணியாகவும் இருக்கக்கூடாது. கையில் எடுத்து உருட்டினால் உருண்டை பிடிக்க வர வேண்டும், அதே சமயம் தட்டினால் இளக்கமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
recipes ராகி அடையும் பச்சை கோசம்பரியும்!
Raagi Murungai Adai

அடை தட்டுவதற்கு வாழை இலை இருந்தால் மிகவும் சிறப்பு. இலையில் சிறிது எண்ணெய் தடவி, ஒரு உருண்டை மாவை வைத்து விரல்களால் மெதுவாகத் தட்டவும். நடுநடுவே கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு தட்டினால் கையில் ஒட்டாமல் மெல்லியதாக வரும். 

வாழை இலை இல்லாதவர்கள், ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது ஈரத் துணியில் தட்டலாம். அல்லது நேரடியாகத் தோசைக்கல்லிலேயே எண்ணெய் தடவித் தட்டலாம்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தட்டி வைத்துள்ள அடையைப் போடவும். சுற்றிலும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். ராகி மாவு வேகுவதற்குச் சிறிது நேரம் எடுக்கும். அதனால் அவசரப்படாமல் மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் சிவக்க வேகவிடவும். முருங்கைக்கீரை மொறுமொறுப்பாகவும், வெங்காயம் பொன்னிறமாகவும் மாறும் வரை சுட்டு எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
எடைய குறைக்கனுமா? - அப்போ இந்த சோயா ராகி அடைய மட்டும் சாப்பிடுங்க!
Raagi Murungai Adai

சூடான, சத்தான ராகி முருங்கை அடை தயார். இதைத் தட்டில் வைக்கும்போதே அந்த முருங்கைக்கீரை வெந்த வாசனை ஆளைத் தூக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது கார சட்னி அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com