உங்கள் சமையலறையில் ஒரு புது முயற்சி: ட்ரை பண்ணிப் பாருங்க!

 kitchen tips
A new venture in your kitchen
Published on

பொதுவாகவே துவையல்‌ என்றால் தேங்காய், பீர்க்கங்காய், வெங்காயம் போன்றவற்றில்தானே செய்வோம். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமா..? இப்பதிவில் வித்தியாசமாக மூன்று துவையல் ரெசிபிகளை பார்க்கலாம்.

இந்த மூன்றுமே ரொம்ப டேஸ்டா வித்தியாசமாக இருக்கும். இதை தோசை இட்லி சப்பாத்தியோட தொட்டுக்கவும் செய்யலாம் இல்லை என்றால் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

வெண்டைக்காய் துவையல்:

முதலில் 10 வெண்டைக்காயை கழுவி துடைத்து பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு ஒரு கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பையும், மூன்று ஸ்பூன் அளவு கடலைபருப்பையும் மற்றும் மூன்று அல்லது நான்கு சிகப்பு காய்ந்த மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

அடுப்பை நிறுத்தாமல் அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றவும். பிறகு வெண்டைக்காயை போட்டு அதற்கு மட்டும் தேவையான அளவு உப்பையும் போட்டு வெண்டைக்காய் வதங்கும் வரை நன்றாக வதக்கவும். பிறகு இதையும் வேற தட்டில் எடுத்து வைக்கவும். பருப்போடு சேர்த்து வைத்தால் பருப்பு நமுத்து போய்விடும். பிறகு சரியாக அரையாது.

பிறகு அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு வெங்காயம் மற்றும் நான்கைந்து பல் பூண்டையும் போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை நிறுத்திவிடவும்.

இவை எல்லாம் ஆறிய பிறகு, மிக்ஸியில் முதலில் பருப்பு மற்றும் சிவப்பு மிளகாயை போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும். பருப்பு அரைந்த பின் வெண்டைக்காய் மற்றும் தக்காளி வெங்காய கலவையையும் போட்டு அரைக்கவும். நன்றாக அரைந்த பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான உப்பு மற்றும் பெருங்காயத் தூளை போட்டு கலக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து மேலே போடவும். கொஞ்சம் நல்லெண்ணெயை மேலோட ஊற்றி கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க.. வெண்டைக்காய் துவையல் ரெடி.. சூப்பராக இருக்கும். சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
கிரிஸ்பி கறிவேப்பிலை மசாலாவுடன் காளான் ட்ரை ஃபிரை!
 kitchen tips

குடை மிளகாய் துவையல்:

வெண்டைக்காய் துவையல் எப்படி செய்தீர்களோ அதே முறை தான் இதற்கும். பூண்டு வேண்டாம் என்று நினைத்தால் சேர்க்க வேண்டாம்.

அளவு விகிதம்: இரண்டு மீடியம் சைஸ் குடை மிளகாய்க்கு நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்இ வேண்டும். பருப்பை பொறுத்த வரையில் ஒரு கைபிடி உளுத்தம் பருப்பு, சிறிது கடலை பருப்பு மற்றும் நான்கு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவேண்டும்.

கத்திரிக்காய் துவையல்:

முதலில் இரண்டு பெரிய குண்டு கத்திரிக்காயை கழுவி, பிறகு மேலே எண்ணெயை தடவி, அடுப்பில் வைத்து சுடவும். நன்றாக சுட்ட பின் அதாவது கறுத்துபோன பிறகு தண்ணீரில் போட்டு ஆற வைக்கவும். ஆறிய பின்பு மேலிருக்கும் தோலை அகற்றி காம்பையும் நீக்கி, உள் சதையை எடுத்து லேசாக கைகளால் மசித்து வைக்கவும்.

பிறகு வாணலியை அடுப்பில வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு ஒரு கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பையும், சிறிதளவு புளி மற்றும் மூன்று அல்லது நான்கு சிகப்பு காய்ந்த மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். ஆறிய பிறகு, மிக்ஸியில் முதலில் பருப்பு, புளி மற்றும் சிவப்பு மிளகாயை போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

இதையும் படியுங்கள்:
அவசர சமையலுக்கு: பத்தே நிமிடத்தில் வெந்தய சாதம்!
 kitchen tips

பருப்பு அரைந்த பின் மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றவும். அதிகமாக அரைக்க கூடாது. அரைத்த பிறகு பாத்திரத்தில் போட்டு உப்பையும் பெருங்காயத்தை போட்டு கலக்கவும். கடுகை தாளித்து கொட்டவும். சுவையான சுட்ட கத்திரிக்காய் துவையல் ரெடி.

மூன்று துவையலையும் செய்து பாருங்கள். உண்மையிலேயே அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com