முருங்கைக்காய் சமையலில் ஒரு புது ட்விஸ்ட் - 4 அட்டகாசமான ரெசிபிகள்!

Delicious recipes!
Drumstick cooking...
Published on

முருங்கைக்காய் பொடிமாஸ்

தேவை:

முருங்கைக்காய் – 10, துருவிய தேங்காய் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, கடுகு, சோம்பு, சீரகம், உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்காயை சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும். தேங்காயுடன் சீரகம், சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். சற்று பெரிய கடாயில் முருங்கைக்காய் துண்டுகளைப்போட்டு, காய்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வேக வைத்த முருங்கைக்காய் துண்டுகளை இதில் போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, வெந்ததும் இறக்கவும். வித்தியாசமான சுவையில் முருங்கைக்காய் பொடிமாஸ் தயார்.

*********

முருங்கைக்காய் தொக்கு

தேவை:

எண்ணெய் - தேவைக்கேற்ப

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலாதூள் - கால் டீஸ்பூன்

தக்காளி - 2

அரைத்த தக்காளி விழுது - கால் கப்

மிளகாய்த்தூள் தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முருங்கை காயை பெரிய நீள துண்டுகளாக நறுக்கி நீரில் வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும் இரண்டாக பிரித்து ஸ்பூன் கொண்டு சதையை மட்டும் வழித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாய் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் எல்லா தூள்களையும் சேர்த்து வதக்கவும்.

பின் முருங்கைகாய் சதை விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

சுவையான, சத்தான முருங்கைகாய் தொக்கு ரெடி.

******

இதையும் படியுங்கள்:
சமையலறையின் சின்னச் சின்ன ரகசியங்கள்!
Delicious recipes!

முருங்கைக்காய் மிளகூட்டல்

(கேரளா ஸ்பெஷல்)

தேவை:

முருங்கைக்காய் – 6, தேங்காய் துருவல் – அரை கப்,

துவரம்பருப்பு – ஒரு கப், பச்சரிசி, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 4,

உப்பு – தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். துவரம் பருப்பை தனியாக வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக அரைக்கவும். வேகவைத்த முருங்கைக்காய்களின் நடு சதைப்பகுதியை, ஒரு ஸ்பூனால் சுரண்டி எடுத்து தோலை நீக்கிவிடவும்.

கடாயில் வேகவைத்த பருப்பு, முருங்கைக்காய் விழுது, அரைத்த தேங்காய் விழுதை (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். கலக்கல் சுவையில் முருங்கை மிளகூட்டல் ரெடி.

*******

முருங்கைக்காய் பால்

தேவை:

பசும் பால் - 1 லிட்டர்

முருங்கைக்காய் - 20 எண்ணிக்கை

சர்க்கரை - 200 கிராம் .

இதையும் படியுங்கள்:
பிஸ்தாவின் ஊட்டச்சத்து நன்மைகள்: உடல்நலப் பிரச்னைகளுக்கான தீர்வு!
Delicious recipes!

செய்முறை:

பசும் பாலைக் காயவைத்து ஆறவைக்கவும் முருங்கைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைக்கவும். பின் முருங்கைக்காயில் உள்ள சதைப்பகுதியை மட்டும் ஒரு ஸ்பூன் உதவியுடன் எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் கூழ் பதம் வரும் வரை அரைக்கவும். அரைத்த விழுதை காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்கு கலக்கி, ஃபிரிட்ஜில் வைத்து குளிர்பானமாக அருந்தலாம். சுவையான, சத்தான பானம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com