
இன்றைய அவசர பரபரப்பான உலகில், காலை உணவை பெரும்பாலான மக்கள் தவிர்த்து ஏனோ கடனுக்கு எதையோ சாப்பிட்டு அலுவலக பணிக்கு செல்கிறார்கள். சிலர் வழக்கமான இட்லியை நாலு வாய் பிய்த்து போட்டு தண்ணீர் குடித்துவிட்டு இருக்கிறார்கள். சத்தான உணவு சாப்பிடுவதற்கு கூட நேரமில்லை.
சத்தான உணவு நட்ஸ் வகைகளும் உண்டு, அதில் முந்திரி, பாதாம், வால்நட் மற்றும் பிஸ்தாவும் அடங்கும். இந்த பிஸ்தா பருப்பு வகைகள் பச்சை நிறத்துடன் உள்ளது. அதில் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன நமது அன்றாட ஆரோக்கிய வாழ்விற்கு நலம் பயக்கும் வகையில் உள்ளதாகும். இதில் புரோட்டீன், பைபர் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றை சாப்பிடுவதால் நமது உடலின் சக்தியை கூட்டுகிறது. நாம் வழக்கமாக சாப்பிடும் காலை உணவோடு ஆறு கிராம் உள்ள பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டால் தசையின் வலிமைக்கு உதவுகிறது. மேலும் சாப்பிட்ட உடன் நிறைவு மனப்பான்மை ஏற்படும்.
இதில் பைபர் நார்ச்சத்து அடங்கியுள்ளதால் நல்ல திடகாத்திரமான உடல், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்க வழிவகை செய்கிறது. ஜீரண சக்தியை மேம்பட செய்யவும் வழி வகை செய்கிறது. உடலின் இரத்த சர்க்கரை அளவினை ஒழுங்குபடுத்தி நிர்ணயிக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொழுப்பு சேர்க்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் நலம் பெற ஊக்குவிக்கிறது. அத்தோடு கெட்ட கொழுப்புகள் தேங்கி இருந்தால் அதைக் குறைக்கவும் செய்கிறது.
இதில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பார்வை துல்லியமாக ஆக்குவதற்கு உதவுகிறது.
பிஸ்தாவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அடங்கி உள்ளதால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறுகின்றன.
நீங்கள் காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது யோகர்ட ஆகியவை சாப்பிட்டால் அதில் இந்த பிஸ்தா பருப்புகளை சேர்த்தால் ஒரு மொறு மொறு தன்மை ஏற்படும். சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும்.
பழவகைகள் சாப்பிடும்பொழுது உதாரணமாக வாழைப்பழம் அல்லது பெர்ரி பழங்களை சாப்பிடும்பொழுது இதை சேர்த்து சாப்பிடலாம்.
பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ஆண்மைக்குறைவு மற்றும் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய உதவும். இது உடலில் ஆற்றல் அளவை அதிகரித்து, தாம்பத்திய உறவின்போது சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. பிஸ்தாக்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.
பிஸ்தா சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளன. அவற்றை ஆய்ந்து சாப்பிடுவது நல்லது.
பிஸ்தாவில் அதிக கலோரிகள் இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அளவுக்கதிகமாக உட்கொண்டால் வீக்கம், வாயு போன்ற செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். வறுத்த பிஸ்தா களில் அதிக அளவு சோடியம் இருக்கும்.
இது இதயநோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். சிலருக்கு பிஸ்தா ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிலருக்கு பிஸ்தா பருப்பை அதிக அளவு உட்கொள்ளும் போது உடலில் சத்துக்கள் அதிகமாகி எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே இந்த பிஸ்தா பருப்புகளை அளவோடு சாப்பிட்டு நலம் பெறுங்கள். ஆரோக்கியமும் உங்கள் கைகளிலே!