
தோசை மாவில் கொஞ்சம் பெருங்காயப் பொடியை சேர்த்துக்கொண்டு தோசை வார்த்தால் தோசை மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
வாழைக்காய் பழுத்துவிட்டால், அதை குக்கரில் வேகவிட்டு தோல் உரித்து மசித்துக்கொள்ளுங்கள். பக்கோடாவுக்கான பிற பொருட்களுடன் சேர்த்து டேஸ்டியான பக்கோடா செய்யலாம்.
மசால்வடை செய்யும்போது அந்த மாவில் இரண்டு ஸ்பூன் ரவையை கலந்துகொண்டு பிசைந்து சுட்டுப்பாருங்கள். சுவையான மசால் வடை ரெடி.
பொடியாக அரிந்த ஏதாவது ஒரு கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்களேன். சப்பாத்தி சுவையாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
மோர்க்குழம்பு செய்யும்போது, தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகத்துடன், சிறிது பச்சைக் கடுகையும் சேர்த்து பால்விட்டு அரைத்துக்கொண்டால், மோர்க் குழம்பின் சுவையே அலாதிதான்.
நாம் தயாரிக்கும் எந்த பதார்த்தம் நீர்த்துப் போனாலும், அதில் சத்துமாவைக் கரைத்துவிட்டால் அது கெட்டியாகிவிடும்.
எண்ணெய், நெய், ஊறுகாய் போன்றவற்றை பாட்டில்களில் நிரப்பும் முன் அந்த பாட்டில்களுக்கு பொருத்தமான ஸ்பூனை போட்டுப் பார்த்து செக் செய்து கொள்ளுங்கள். இல்லயென்றால், பதார்த்தங்களுக்கு உள்ளே அமுங்கியோ, பாட்டில்களை விட நீளமாகவோ, ஸ்பூன்கள் அமைந்து ஒவ்வொரு தடவை பதார்த்தத்தை எடுக்கும்போதும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
டிஷ்யூ பேப்பர்களில் பெர்ப்யூமை ஸ்பிரே செய்து உடைகளின் நடுவே வைத்துவிட்டால், உடைகளை உடுத்தும்போது மணம் வீசும்.
மாத்திரைகளை விழுங்க கஷ்டமாக இருந்தால், முதலில் வாயில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு மொத்தமாக விழுங்கினால் மாத்திரைகள் தொண்டைக்கு உள்ளே போவதே தெரியாது.
தோசைமாவு புளித்துப் போய்விட்டதா? கவலை வேண்டாம். அதில் பாதியளவு கோதுமைமாவு அல்லது ராகி மாவைக்கலந்து, தேவையான உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்புச்சுவை அறவே நீங்கிவிடும்.
வெண்பொங்கல் செய்ததும் அது சூடாக இருக்கும்போதே, ஆறின பாலை இரண்டு கரண்டி அளவு அதில் விட்டுக்கிளறி மசித்து வைத்துவிட்டால் பொங்கல் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
சாதாரண பூட்டாக இருந்தாலும், கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டு துவாரமாக இருந்தாலும், சரியாக திறந்து மூட முடியவில்லை என்றால், உங்களிடமுள்ள சென்ட் பாட்டிலில் இருந்து கொஞ்சம் திரவத்தை துவாரங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இனி சுலபமாக திறக்க முடியும்.