அலாதியான சுவையில் அந்தக் காலத்து அக்காரவடிசல்!

அக்காரவடிசல்...
அக்காரவடிசல்...
Published on

புதுப்புது உணவுகளைத் தேடித்தேடி உண்பதை விட, நாம் மறந்து போன நமது பாரம்பரியமான  உணவு வகைகளை மீட்டெடுத்து - அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமையல்லவா!?

வாருங்கள்! அக்காலத் தமிழர்கள் அமிர்தம்போல விரும்பி உண்ட அக்கார அடிசில் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அக்காரம் - என்றால் வெல்லம்! அடிசில் என்றால் வேக வைத்த நெல் சோறு.
அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, சோறு என்பன தமிழ் மொழியில் உணவைக் குறிக்கும் சொற்களில் சில!

பேச்சு வழக்கில் அக்காரவடிசல் என்றழைக்கப்படும் இதன் தனித்துவமான சுவைக்கு மிக முக்கியமான காரணம் -
பச்சரிசி , பாசிப்பருப்பு, வெல்லம் ஆகிய மூன்றையும் (தண்ணீர் எதுவும் சேர்க்காமல்) முற்றிலுமாக பாலிலேயே வேக வைப்பதுதான்.. கூடுதலாக சேர்க்கும் பாலும், நெய்யும் மற்றும் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரத்தின் அலாதியான வாசமும் இதன் சிறப்பம்சங்களாகும்.

இன்றைக்கும் பெரும்பாலான வைணவக் கோயில்களில் பெருமாளுக்கு பிரசாதமாகப் படைக்கப்படும் இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - ½ கப்
பால் - 1 ½ லிட்டர்
வெல்லம் - 2 ½ கப்
நெய் - ½ கப்
முந்திரி பருப்பு - 15
உலர் திராட்சை - 15
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் - சுவைக்கேற்ப.

செய்முறை :
முதலில்  பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் லேசான பொன்னிறமாக  வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு தண்ணீரில் ஒரு முறை அலசி விட்டு ஒரு குக்கரில்  பால் சேர்த்து குறைவான தீயில் வைத்து அரிசி பருப்பு மசிந்து வரும் வரை நன்கு வேக வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில்  வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஓரளவு கொதித்ததும் தனியே எடுத்து வைக்கவும்.


அரிசி பருப்பு குழைந்த பின்னர் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். இதனை கலந்த பின்னர் 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
அசர வைக்கும் அவரைக்காயின் பலன்கள்!
அக்காரவடிசல்...

ஒரு வாணலியில்  நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்புகளைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அடுத்து உலர் திராட்சைகளைச் சேர்த்து உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

கடைசியாக லேசாக இடித்துப் பொடியாக்கிய ஏலக்காய், கிராம்பு மற்றும் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை ஆகியவற்றை அக்காரவடிசல் உடன் சேர்த்துக் கிளறி விட்டு மேலும் சிறிதளவு நெய் மற்றும் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்கவும்.

சுவையான அக்காரவடிசல் தயார்.

தற்காலத்தில் நாம் விரும்பி உண்ணும் சர்க்கரைப் பொங்கலின் பண்டைய 'ஒரிஜினல் வெர்ஷன்' - தான்  இந்த அக்கார அடிசில் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com