அவரைக்காய் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய பிரசித்தி பெற்ற காய்கறிகளுள் ஒன்றாகும். இந்தியாவில் இக்காய் வருடம் முழுவதுமே கிடைக்கும். உலகிலேயே மிகவும் பழைமையான காய்கறிகளில் ஒன்றாகும். அவரைக்காய் நாட்டு காய்கறிகளில் ஒன்றாகும். பச்சை நிறத்தில், ஆறு விதைகளைக் கொண்டதாகும்.
அவரைக்காயை சமைப்பதற்கு முன் அதன் இரண்டு பக்கத்திலும் இருக்கும் நாரை எடுத்து விடுவார்கள். அவரைக்காயின் சுவை இனிப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். அவரைக்காயை சாம்பார், தால் ஆகியவற்றிற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் காய்கறியாகும். அவரைக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது செரிமானத்திற்கு மிகவும் உதவும். அவரைக்காயில் மினரல், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
அவரைக்காயி வைட்டமின் பி இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் நல்லதாகும். ஜப்பான் விஞ்ஞானிகள் வைட்டமின் பியை உணவில் சேர்த்து கொள்வதால் இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும், ஸ்ட்ரோக்கிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். அவரைக்காயில் தையாமின் அதிகமாக உள்ளது. அதனால் இதயத்தின் இயக்கத்திற்கு இது பேருதவியாக இருக்கும்.
அவரைக்காயில் போலேட் அல்லது போலிக் ஆசிட் அதிகமாக உள்ளதால் இது இதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் தடித்துப் போவதை தடுக்கும். பார்க்கின்சன் வியாதி நரம்பு மண்டலத்தை பாதித்து நடப்பது போன்ற அன்றாட செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோய் வந்தால் மூளையில் உருவாகும் டோப்பமைன் சுரப்பது நின்றுவிடும். டோப்பமைன்னே மூளைக்கும் தசைக்குமான கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படுவதாகும். இதனால் நடுக்கம் போன்ற பிரச்னைகள் வரும். பார்க்கின்சன் சிகிச்சைக்காக எல்டோப்பா பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்டோப்பா அவரைக்காயில் அதிக அளவில் உள்ளது.
அவரைக்காய் உடல் எடை குறைப்பிற்கு அதிகம் பயன்படுகிறது. இதில் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் உள்ளன என்பது குப்பிடத்தக்கதாகும். அவரைக்காயில் அதிகமாக பொட்டாசியம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரகம் மற்றும் இதயத்தை சீராக்க உதவுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரையில் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலில் அவரைக்காயும் உள்ளது.
அவரைக்காயில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால் குடல் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது குடலின் Ph லெவலை சீராக்கி பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அவரைக்காயில் வைட்டமின் பி, சி, கே, மெக்னிஸியம், மாங்கனீஸ், ஸிங் ஆகியவை நோய் எதிர்ப்பு அமைப்பை சீராக்குகிறது. மேலும், இது சருமத்தின் அழுக்குகளை நீக்க உதவுகிறது.
அவரைக்காயை சாலட், பாஸ்தா, சைட் டிஷ்களாக பயன்படுத்துவார்கள். அவரைக்காயில் அதிகமாக பொரியல் செய்து உண்பார்கள். எனவே, அவரைக்காயின் சுவையும், பலன்களும் அதிகமாகவே உள்ளதால் உணவில் தினமும் சேர்த்துப் பயன் பெறுங்கள்.