டேஸ்ட் அட்லஸ் ஒரு உணவு வழிகாட்டி அமைப்பு ஆகும். இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு உணவு வகைகளை மதிப்பீடு செய்து, தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. இது அன்மையில் வெளியிட்ட உலகின் டாப் 50 உணவுகளில் 9 இந்திய உணவுகள் இடம் பெற்றுள்ளன. அவை மட்டன், சிக்கன் மற்றும் காய்கறிகளுடன் சமைக்கப்படும் குழம்பு அல்லது கிரேவி வகைகள் சார்ந்தவை எனக் குறிப்பிடுகிறது.
இந்த முர்க் மக்னி (பட்டர் சிக்கன்) என்பது இந்தியாவின் டெல்லி நகரத்திலிருந்து உருவான உணவாகும். இது மசாலா, தக்காளி மற்றும் வெண்ணெய் (மக்கன்) கோழியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை கிரேவி ஆகும். இந்த கெட்டியான கிரேவி பொதுவாக அதன் சுவைக்கு பெயர் பெற்றது. டேஸ்ட் அட்லஸ் தரவரிசையில் இது 4 வது இடத்தைப் பெற்றுள்ளது.
மட்டன் கொத்துக்கறி வைத்து தயாரிக்கப்படும் உணவு மட்டன் கீமா இதை வெள்ளை சாதம், சப்பாத்தி, தோசை, பூரி, நாண், புலாவ் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். டேஸ்ட் அட்லஸ் தரவரிசையில் இது 8 வது இடத்தில் உள்ளது.
மிசல் பாவ் என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பிரபலமான உணவு. இந்த பாரம்பரிய உணவை அவர்கள் மதிய உணவாகத் தயாரித்து உண்பதில் மிக்க ஆர்வமுடையவர்கள். இது முளைகட்டிய பாசிப்பயறு மற்றும் மசாலா வைத்து தயாரிக்கப்படும் ஒரு கறி வகை. இது மிசல் என்று அழைக்கப்படுகிறது, மற்றும் பாவ், ஒரு வகை இந்திய பன் ரொட்டி ரோல். அட்லஸ் தரவரிசையில் இது 12 வது இடத்தில் உள்ளது.
குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தயிர், தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும். இதில் பலவகை உண்டு. இதில் சீரகம், தனியா போன்ற நறுமணப் பொருட்களுடன் தயிர் மற்றும் கறிகள் சேர்த்து சமைக்கப்படும் உணவாகும். பாரம்பரியமாக, இது பானையின் மேலும் கீழும் ஆகிய இரு பக்கங்களிலும் சூடு செய்யப்பட்டு சுற்றிலும் சூடேற்றி தயாரிக்கப்படுகிறது. டேஸ்ட் அட்லஸ் தரவரிசையில் 24 வது இடத்தில் உள்ளது.
விண்டலூ என்பது கோவா சமையல் பாணியில் தயாரிக்கப்படும் ஒரு காரமான மசாலா உணவு ஆகும். இது பொதுவாக கோழிக்கறி, காய்கறிகளுடன் தயாரிக்கப்படுகிறது. விண்டலூவின் பெயர், போர்த்துகீசிய வார்த்தையான "vindalho" என்பதிலிருந்து வந்தது. விண்டலூவைச் செய்ய, இறைச்சி அல்லது காய்கறிகள் முதலில் வினிகர், இஞ்சி, பூண்டு மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து ஊறவைக்கப்படுகின்றன. பின்னர், கெட்டியான மசாலா கிரேவியில் வேக வைக்கப்படுகின்றன. விண்டலூ வெதுவெதுப்பான, காரமான, இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டதாக இருக்கும். அட்லஸ் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது.
'தால் தோதா' என்பது ஒரு வகை சிந்தி உணவு. இது அரிசி அல்லது ராகி மாவை வைத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை போட்டு செய்யப்படுகிறது. இது ஒரு வட்ட வடிவில், மெல்லிசாக தட்டப்பட்டு, மிதமான தீயில் சமைக்கப்படுகிறது. இது காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு ஏற்ற ஒரு சுவையான உணவு. டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் 34 வது இடத்தில் உள்ளது.
சாக் பனீர் இந்திய பாலாடைக்கட்டி உடன் பசுமையான கீரைகள் மற்றும் மசாலா சேர்த்து, சமைக்கப்படும் ஒரு சுவையான உணவு. டேஸ்ட் அட்லஸ் தரவரிசை பட்டியலில் 39 வது இடத்தில் உள்ளது.
ஷாஹி பனீர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்திரி, பாதாம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மசாலா பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து வறுத்து, பிறகு, தயிர், தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கடைசியாக பனீர் க்யூப்ஸை மசாலா வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு தயாராகும் சுவையான உணவு ஷாஹி பனீர் . இது அட்லஸ் பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.
ஷாகோதி என்பது இந்தியாவின் கோவாவில் தயாரிக்கப்படும் உணவு. இது வெள்ளை பாப்பி விதைகள், துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம், வறுத்த துருவிய தேங்காய் மற்றும் பெரிய சிவப்பு மிளகாய் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சிக்கன், நண்டு அல்லது மட்டன் உடன் சேர்க்கப்பட்டு தயாராகும் உணவு. டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் 50 வது இடத்தில் உள்ளது.