

நான் மிகவும் ரசித்து சாப்பிடுபவன் அல்ல. சாப்பாட்டில் மிகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வேன் என்று கூறுபவர்கள் கூட ஒரே ஒருவேளை எப்பொழுதும்போல் சாப்பாடு இல்லாமல் கொஞ்சம் ருசி குறைந்திருந்தால் முகத்தை சுளிப்பார்கள். எல்லோரும் விரும்புவது ருசிகரமான சமையலைத்தான். அதற்கான டிப்ஸ் இதோ:
வெங்காயம் தக்காளி வதக்கி காரச் சட்னி வைக்கும் பொழுது புளியோதரை தொக்கில் போடப்பட்டிருக்கும் மிளகாய் வற்றலை எடுத்து வைத்து அரைத்துப் பாருங்கள். சுவை அசத்தலாக இருக்கும்.
கருவேப்பிலையுடன் தேங்காய், குடம்புளி, இஞ்சி, இந்துப்பூ போன்றவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். புத்தி கூர்மைக்குச் சிறந்தது இது.
வாழைப்பூவில் பருப்பு உசிலி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்.
வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து வதக்குவோம். அதற்கு பதிலாக கேரட்டையும் துருவி சேர்த்து வதக்கிப்பாருங்கள் ருசியாக இருக்கும்.
கத்தரிக்காய், பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை சமைக்கும் பொழுது சிறிது புளி கரைசலை விட்டால் கசப்பு தெரியாது.
முள்ளங்கி, முட்டைகோஸ் வேகும்போது அதில் வீசும் வாடையைத் தவிர்க்க அத்துடன் ஒரு காய்ந்த ரொட்டி ஸ்லைசைப் போடலாம்.
கேசரி, அல்வா போன்றவைகள் செய்யும்பொழுது பாதாம், முந்திரியை பொடித்துப் போட்டு கிளறி இறக்கினால் ருசி அபாரமாக இருக்கும்.
பீட்ரூட் அல்வா செய்யும்பொழுது சக்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
வெஜிடபிள் போகா செய்யும் பொழுது பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ் முதலியவற்றை சிறிது நேரம் தண்ணீரில் வேக வைத்து எடுத்து தாளித்தால் காய்கறிகள் வெந்து மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் தேவைப்படாது.
மீந்த தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சிறிது உப்பை தூவிவிட்டு பிறகு பூண்டை நறுக்கினால் கத்தியுடன் ஒட்டாமல் நறுக்க வரும்.
காய்கறிகளை அதிகமாக வேகவைத்துவிட்டால் காய்கறி சமைத்து வைத்துள்ள பாத்திரத்தை ஐஸ் தண்ணீரின் மேல் மிதக்கவிடவும் 15 - 30 நிமிடம் வரை கிளறாமல் வைத்து எடுக்கவும்.
பீன்ஸ் காய்ந்துவிட்டால் அதை வேகவைத்த பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் விரைவாக வேகாது.
பால் திரிந்துவிட்டால் வடிகட்டி தனியே எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி அதில் மில்க்மெய்டு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் பால்சந்தியாக ருசிக்கலாம்.
கோதுமை மாவுடன் சோளமாவை கலந்து அதனுடன் உப்பு வேகவைத்து அரைத்த மேத்தி, மிளகு ,சீரகப் பொடி, மிளகாய்த்தூள், சீனித்தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்திகளாக செய்வது தேப்லா.இதைநீண்ட நெடும் பயணம் டூர் செல்லும்பொழுது எடுத்துச்சென்றால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.