
பனிக்கூழ் தோசை ரோல்
தோசை என்றால் பொதுவாக கார சுவையோடு சாப்பிடப்படும் உணவு. ஆனால் அதையே சிறிது புதுமையாக, இனிப்பு வகையாக மாற்றி சுவைக்கலாம். அதற்கான ஒரு சிறந்த முயற்சிதான் பனிக்கூழ் தோசை ரோல். இதை செய்ய...
தேவையான பொருட்கள்:
தோசை மாவு – 1 கப்
நெய் / வெண்ணெய் – 1 டீஸ்பூன்
வெனிலா அல்லது ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்
சாக்லேட் சிரப் – 2 டீஸ்பூன்
நட்ஸ் (பிஸ்தா, பாதாம், முந்திரி) – சிறிதளவு
ஜாம் அல்லது தேன் – விருப்பத்திற்கு
செய்முறை: தவாவை சூடாக்கி, மெல்லிய தோசை போடவும். தோசையின் ஓரங்களில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுடவும். தோசை மிகக் குருமாக (crisp) ஆகாமல், சிறிது மென்மையாக இருக்க வேண்டும் (ரோல் செய்ய சுலபமாக). தோசை சூடாக இருக்கும்போதே நடுவில் ஒரு ஸ்கூப் பனிக்கூழை வைக்கவும். மேலே சாக்லேட் சிரப் ஊற்றவும். நறுக்கிய நட்ஸ் தூவவும். விருப்பமிருப்பின் தேன் அல்லது ஜாம் சிறிது தடவி இனிப்பை அதிகரிக்கலாம். பனிக்கூழ் உருகுவதற்கு முன் தோசையை மெதுவாக சுருட்டவும். துண்டுகளாக வெட்டி, மேலே சாக்லேட் சிரப் அல்லது பவுடர் சீனி தூவி அலங்கரிக்கவும்.
உடனே பரிமாறினால் சூடான தோசை + குளிர்ந்த ஐஸ்க்ரீம் சேர்ந்து ஒரு அற்புதமான சுவைதரும். சிறார்களுக்கும், இனிப்பைப் பிடிப்பவர்களுக்கும் இது ஒரு புதுமையான டெசர்ட் ஆகும்.
பாப்கார்ன் பாயசம்
பொதுவாக பாப்கார்னை ஸ்நாக்ஸ் மாதிரிதான் சாப்பிடுவோம். ஆனால் பால், சர்க்கரை சேர்த்து ஒரு வித்தியாசமான பாயசமாகவும் செய்து பார்க்கலாம். அதற்கு
தேவையான பொருட்கள்:
பாப்கார்ன் – 1 கப் (உப்பு, மசாலா இல்லாமல் சாதாரணமாக வெந்தது)
பால் – 2 கப்
சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் – 2 (பொடி செய்து கொள்ளவும்)
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை: சாதாரணமாக வெண்ணெய்/உப்பு இல்லாமல் வெந்த பாப்கார்னை எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் பாலை கொதிக்க வைத்து, பாப்கார்னை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். பால் கொதித்து பாப்கார்ன் நன்கு ஊறியதும், சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துவிடவும். ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். பால் அடர்த்தியாகி பாப்கார்ன் மெலிதாக மாறியதும் அடுப்பை அணைத்து பரிமாறலாம்.
பாப்கார்ன் பால் குடித்து அதிகமாக மென்மையாவதால், சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது சுவையாக இருக்கும். பாப்கார்னின் அளவை பாலை விட அதிகமாக போடக்கூடாது, இல்லையெனில் பாயசம் கெட்டியாகிவிடும்.
ரோஜா ஜாம் பால் குலுக்கல்
தேவையான பொருட்கள்:
குளிர்ந்த பால் – 2 கப்
ரோஜா ஜாம் ( Rose Syrup) – 3 மேசைக் கரண்டி
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு
சர்க்கரை – 1 மேசைக் கரண்டி
வெண்ணிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப் (மேலே அலங்கரிக்க)
செய்முறை: மிக்ஸியில் குளிர்ந்த பால், ரோஜா ஜாம், சர்க்கரை (தேவையெனில்) சேர்த்து நன்றாக அடிக்கவும். பால் நுரையுடன் குலுங்கும் வரை நன்றாக கலக்கவும். கண்ணாடி டம்ளரில் சில ஐஸ் கட்டிகள் போட்டு, அதன் மீது இந்த கலவையை ஊற்றவும். விருப்பமெனில் மேலே வெண்ணிலா ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து, சிறிது ரோஜா ஜாம் சொட்டலாம். சுவையான ரோஜா ஜாம் பால் குலுக்கல் ரெடி.