
நாம் வீட்டில் மீதமாகும் அரிசி சாதத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலை பழைய சோறு என்ற பெயரில் சாப்பிடுகிறோம். இது ஒரு முழுமையான ஆரோக்கியமான உணவாகும். இதை ஒடிசாவில் பகலா (Pakhala) என்று அழைக்கிறார்கள். இதுமட்டுமின்றி இதை தங்கள் முக்கிய உணவாகவும் கலாச்சார அடையாளமாகவும் கருதி ஒவ்வொரு ஆண்டும் பகலா தினம் என்றொரு புகழ்பெற்ற உணவுத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த உணவினை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஒடியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.
ஒடிசாவில் தோன்றியதாக கருதப்படும் இந்த உணவானது பின்னர் மேற்கு வங்காளம், அஸாம், சத்தீஷ்கர் மற்றும் ஜார்கண்ட் முதலான அண்டை மாநிலங்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உணவாக இருந்த பகலா பின்னர் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தது. பூரி ஜெகந்நாதர் கோவிலின் மகா பிரசாதங்களுள் பகலாவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
மிக எளிய முறையில் தயாரிக்கலாம் என்பது இந்த உணவின் சிறப்பம்சமாகும். சமைத்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் புளிக்க வைத்தால் நொதித்தல் நடைபெற்று காலையில் சுவையான பகலா தயாராகிவிடும். பகலாவில் பல வகைகள் உள்ளன. புதிதாக சமைக்கப்பட்ட சாதத்தை தண்ணீரில் நொதிக்கவிடாமல் ஊறவைத்து தயாரிப்பது சாஜா பகலா என்று அழைக்கப்படுகிறது. பகலாவுடன் தயிர் சேர்த்தால் அது தஹி பகலா என்றுழைக்கப்படுகிறது. பகலாவில் வறுத்த சீரகத்தைக் கலந்தால் அது ஜீரா பகலா என்று அழைக்கப்படுகிறது. வெல்லத்தைக் கலந்தால் அது மிதா பகலா என்றழைக்கப்படுகிறது.
நாம் பழையசோறை பச்சைமிளகாய், வெங்காயம், மசால்வடை முதலான துணை உணவுகளுடன் சாப்பிடுவதைப்போல பகலாவானது பலவிதமான பிரத்யேகத் துணை உணவுகளுடன் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வெயிலில் உலர்த்தப்பட்ட படி (அதாவது உளுத்தம் பருப்பை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைத்தது), கடுகெண்ணெய், வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மற்றும் கொத்துமல்லி இவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த துணை உணவு “படி சுரா” (Badi Chura) என்று அழைக்கப்படுகிறது.
தக்காளி, கடுகெண்ணெய், பச்சை மிளகாய், பூண்டு, மசாலாப் பொருட்கள், உப்பு இவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு துணை உணவு “தக்காளி போடா” என்று அழைக்கப்படுகிறது. மொறுமொறுவென வறுத்த மீனை “மச்சா மஜா” என்று அழைக்கிறார்கள். இவையெல்லாம் பகலாவின் சுவையை அதிகரிக்கச் செய்யும் துணை உணவுகளாகும்.
அதிகமான நீர்சத்து உள்ள உணவாதலால் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கோடை காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த உணவாக பகலா திகழ்கிறது. இந்த உணவு நொதித்தல் மூலம் தயாராவதால் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி குடல் ஆரோக்கியத்தைக் காப்பதுடன் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது.
புளித்த சாதத்தில் உருவாகும் புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அசிடிட்டி பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்கிறது. இந்த உணவினை காய்கறி, மீன் மற்றும் பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் போதிய வைட்டமின்களை நம் உடலானது சுலபமாகப் பெறுகிறது. இதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமாகத் திகழும்.
ஒடிசா மக்களைப் பொறுத்தவரை பகலாவை அவர்கள் வெறும் உணவாகப் பார்க்காமல் தங்கள் வாழ்க்கை முறையாகவும் கலாச்சாரப் பிரதிபலிப்பாகவும் பார்க்கிறார்கள்.