மணி மணியா ஒரு ஸ்நாக்ஸ்! தட்டுல வச்ச வேகத்துல காலியாகிடும் செட்டிநாடு ஸ்பெஷல்!

Ammani Kozhukattai
Ammani Kozhukattai
Published on

ஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு, ஒரு சூப்பரான சாய்ஸ் இந்த அம்மிணி கொழுக்கட்டை. இதை 'மணி கொழுக்கட்டை' என்றும் சொல்வார்கள். 

முத்து முத்தாக, பார்க்கவே அழகாக இருக்கும் இந்தச் சிறிய உருண்டைகளை, நெய்யும் இட்லி மிளகாய் பொடியும் சேர்த்து வதக்கும் போது வரும் வாசனை இருக்கிறதே... அப்பப்பா! அக்கம் பக்கத்து வீட்டாரையே எட்டிப் பார்க்க வைக்கும். காரைக்குடி பக்கம் மிகவும் பிரபலமான இந்த டிஷ், இப்போது உங்கள் வீட்டு கிச்சனிலும் மணக்கப் போகிறது. வாருங்கள், எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி மாவு- 1 கப்

  • தண்ணீர் - 1 ½ கப் 

  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு.

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • கடுகு - ½ டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - 1 கொத்து

  • இட்லி மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்

  • பூண்டு - 4 பற்கள்

செய்முறை:

முதலில் கொழுக்கட்டைக்கான மாவைத் தயார் செய்வதுதான் முக்கியமான வேலை. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு நன்கு கொதிக்கவிடவும். 

தண்ணீர் தளதளவென கொதிக்கும்போது, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, அரிசி மாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி கிளறவும். மாவு வெந்து, ஒன்றாகத் திரண்டு பந்து போல வரும். 

இந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடம் அப்படியேவிடவும். அந்தச் சூட்டிலேயே மாவு இன்னும் மென்மையாகும்.

மாவு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு மாவை நன்கு மென்மையாகப் பிசையவும். பிறகு, இந்த மாவில் இருந்து மிகச் சிறிய, கோலிக்குண்டு அளவை விடச் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

இதையும் படியுங்கள்:
நேரம்: வெற்றி வாசலின் திறவுகோல்!
Ammani Kozhukattai

இதுதான் "அம்மிணி" அல்லது "மணி". இது செய்வதற்குச் சிறிது நேரம் எடுக்கும் என்பதால், வீட்டில் உள்ள குழந்தைகளையும் உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம். உருட்டிய உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் ஒரு 7 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். உருண்டைகள் வெந்ததும் பளபளவென மின்னும்.

இப்போதுதான் அசல் செட்டிநாடு ருசியைக் கொண்டுவரப் போகிறோம். ஒரு கடாயில் தாராளமாக நெய் ஊற்றவும். நெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும். 

பருப்புகள் பொன்னிறமானதும், கறிவேப்பிலை மற்றும் தட்டிய பூண்டைச் சேர்க்கவும். பூண்டு சேர்ப்பது நல்ல மணத்தைக் கொடுக்கும். பிறகு, நாம் வேகவைத்து வைத்துள்ள மணி கொழுக்கட்டைகளை இதில் கொட்டவும்.

கொழுக்கட்டைகள் நெய்யில் பட்டதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லி மிளகாய் பொடியைத் தூவவும். பொடி எல்லா உருண்டைகளிலும் படும்படி மெதுவாகக் கிளறவும்.

இதையும் படியுங்கள்:
தோட்டத்தை நாசம் செய்ய வரும் பிராணிகளை கலங்கடிக்கும் முள் கரண்டி மேஜிக்!
Ammani Kozhukattai

கரண்டி போட்டு வேகமாகத் திருப்பினால் உருண்டைகள் உடைந்துவிடும். நெய்யும், காரப் பொடியும் சேர்ந்து உருண்டைகளின் மேல் ஒட்டிக்கொண்டு, ஒரு நிமிடம் வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

சுடச்சுட, நெய் மணக்க மணக்க "செட்டிநாடு நெய் பொடி அம்மிணி கொழுக்கட்டை" தயார். பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். இன்றே முயற்சி செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com