
பச்சைப் பயறு என்றாலே நமக்கு நினவில் வருவது கிராமத்து பச்சப் பயறு கடைசல் மற்றும் குழம்புதான். அந்த பச்சை பயறில் புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
பச்சை பயிரில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் (ஃபோலேட், வைட்டமின் B6, C), தாதுக்கள் (இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம்) நிறைந்துள்ளன. இது ஜீரண மண்டலத்தை வலுவாக்குகிறது உடல் நச்சுக்களை வெளியேற்றி உடலில் எடை குறைப்பிற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக உள்ளது.
பச்சைப்பயறு பட்டாணி புலாவ்
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு உடைத்தது 1 டம்ளர்
அரிசி 1 ½ டம்ளர்
உரித்த பச்சைப் பட்டாணி 200 கிராம்
பிரிஞ்சி இலை 2 No
அன்னாசி பூ 2 No
சோம்பு ஒரு டீஸ்பூன்
கசகசா ஒரு டீஸ்பூன்
பட்டை சிறியது 2 No
கல்பாசி சிறிதளவு
உலர் ரோஜா இதழ்கள் சிறிதளவு
கிராம்பு 2 No
ஏலக்காய் 2 No
முந்திரி பருப்பு ‘10 No
பச்சை மிளகாய் 6 No (அவரவர் தேவைக்கு ஏற்ப மாறுபடும்)
பெரிய வெங்காயம் 2 No
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
பொதினா ஒரு கைப்பிடி
கொத்து மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
ஆயில் 100 ml
நெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அரிசி பருப்பு சேர்த்து நன்கு கழுவி ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் கசகசாவை வறுத்து எடுத்து பிறகு சோம்பு, கிராம்பு ஏலக்காய் ரோஜா இதழ்களை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் ஆறவிடவும் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றிவிட்டு அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து முந்திரிப் பருப்பை உடைத்து சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் ஆயில் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை பிரிஞ்சி இலை அன்னாசி பூ கல்பாசி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு பச்சைப் பட்டாணியை சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொருள்களையும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறிபச்சை வாசனை போனதும் எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொதித்து வரும்போது அதில் அரிசி பருப்பு கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
மூன்று விசில் வந்ததும் இறக்கிவைத்து சிறிது நேரம் கழித்து திறந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை புதினா மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.
இதற்கு side dish ஆக கேரட் மாதுளை முத்துக்கள் கலந்த பச்சடி சூப்பர் காம்போ ஆக இருக்கும்.
கேரட் மாதுளை முத்துக்கள் கலந்த பச்சடி
கேரட் 2 No
மாதுளை முத்துக்கள் ஒரு கப்
கொத்துமல்லி இலை சிறிதளவு
தயிர் 2 கப்
மிளகுத்தூள் (pepper) 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவைக்கேற்ப
முதலில் கேரட்டை தோல் சீவிவிட்டு நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.
கேரட் கொத்தமல்லி தழை மிளகுத்தூள் (pepper) உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசறிக்கொண்டு அதனை தயிரில் கலந்து மாதுளை முத்துக்களை சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு சுவையான ஆரோக்கியமான lunch box ரெடி.