
திப்பரொட்டி செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி ரவை- ஒரு கப்
உளுத்தம் பருப்பு- ஒரு கப்
சீரகம் -ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு ஏற்ப
செய்முறை:
இட்லி ரவையையும் உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக நன்றாக ஊறவைக்கவும். ஊறிய உளுந்தை மிக்ஸியில் நன்றாக மைபோல் அரைத்து எடுக்கவும். இதனுடன் ஊறவைத்த ரவையை சேர்த்து உப்பு போட்டு புளிக்க விடவும்.
பின்னர் அதனுடன் சீரகத்தை கலந்து வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய்விட்டு மூன்று கரண்டி மாவை எடுத்து ஊத்தப்பங்களாக ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேகவிட்டு இருபுறம் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாகவும், பொன்னிறமாகவும் மாறியதும் எடுக்க வேண்டியதுதான்.
இதற்கு காரசாரமான பூண்டு சட்னி, வெங்காய தக்காளி சட்னி, இஞ்சி சட்னி நல்ல ஜோடி சேரும்.
அல்லம் சட்னி செய்முறையைப் பார்ப்போம்.
அல்லம் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி- பெரிய துண்டு
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா, வெல்லத் துருவல், கொப்பரைத் துருவல் தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் -10
தாளிக்க- கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயம்- தேவையான அளவு.
செய்யும் முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி விதையை நன்றாக வறுத்து எடுத்து வைத்துவிடவும். அதேபோல் இஞ்சித் துருவலையும் வறுத்து எடுத்து வைத்துவிடவும்.
பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கொப்பரைத் துருவல் இவற்றை வறுத்து எடுத்துக்கொண்டு ஆறவிட்டு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பின்னர் உப்பு வெல்லம் சேர்த்து நன்றாக சுற்றி எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும். திப்ப ரொட்டியுடன் இதை சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.