
கேள்வி: புளிசாதம், எலுமிச்சை,. தேங்காய், தக்காளி சாத வகைகள் உதிரி உதிரியாக, சுவையாக இருக்க என்ன செய்யவேண்டும்?
பதில்: இந்த சாதவகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு, நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
கேள்வி: உருளைக்கிழங்கு வெந்ததும் வெடிக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா?
பதில்: உருளைக்கிழங்கு வேகவைக்கும்போது சிறிது உப்பைச்சேர்த்துக்கொண்டால் அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்கும்.
கேள்வி: இட்லிப்பொடி வாசனையாக இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்?
பதில்: இட்லிப்பொடி தயாரிக்கும்போது மல்லி ஒரு ஸ்பூன் சேர்த்து தயார் செய்தால் அதன் வாசனையே அலாதிதான்.
கேள்வி: சாதம் வெண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: சாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்துவிட்டால் சாதத்தின் வெண்மை கொள்ளை கொள்ளும் மனதை.
கேள்வி: துவரம் பருப்பு சீக்கிரம் வேக ஒரு வழி?
பதில்: துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். கேஸ் மிச்சமாகும்.
கேள்வி: மொறுமொறுவென்று அடை செய்ய ஒரு வழி?
பதில்: இரு வழிகள் இருக்கிறது. அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம், அல்லது உருளைக்கிழங்கை துண்டுகளாக போட்டு அரைக்கலாம். அடை மொறு மொறுவென்று இருக்கும்.
கேள்வி: சோற்று வடாம் எப்படி செய்வது?
பதில்: பழைய சோற்றை உப்பு போட்டுப் பிசைந்து நாலு மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து போட்டுக்கலந்து, சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் வைத்து விடுங்கள். சுவையான சோற்று வடாம் தயார்.
கேள்வி: சாம்பார் சுவையாக இருக்க என்ன செய்யவேண்டும்?
பதில்: சாம்பார் பொடிக்கு அரைக்கும் போது ஒரு கப் புழுங்கலரசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது சாம்பார் குழைவாகவும், ருசியாகவும், கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
கேள்வி: பூசணி அல்வா சுவையாக இருக்க ஒரு வழி?
பதில்: பூசணி அல்வா செய்யும்போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு செய்தால் அல்வா சுவை அலாதிதான்.
கேள்வி: ஆப்பம் மொறுமொறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் ஆப்பம் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
கேள்வி: சட்னி வெகு நேரம் கெட்டுப்போகாமல் இருக்க ஒரு வழி?
பதில்: பச்சை மிளகாய் சேர்த்து சட்னி அரைக்கும்போது, முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால் பச்சை மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
கேள்வி: கீரைகளின் பச்சை நிறம் மாறாமலிருக்க எதாவது வழி இருக்கா?
பதில்: கீரைகளை சமைக்கும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்தால் கீரையின் பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.