
சமையலில் பருப்பு சேர்ப்பது என்பது இந்தியர்களிடையே பண்டைய காலம்தொட்டே இருந்து வரும் பழக்கம். குறிப்பாக ஆந்திர மாநில மக்கள் மூங், மசூர், தூர், சன்னா என பல வகையான பருப்புகளில் சுவை மிக்க உணவுகளைத் தயாரித்து சாதம், சப்பாத்தி போன்றவை களுடன் சேர்த்து உட்கொண்டு வருகின்றனர். இங்கு நாம் கார சாரமான ஆந்திரா ஸ்டைல் 'கோங்குரா பப்பு' மற்றும் 'டொமட்டோ பப்பு' செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கோங்குரா பப்பு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.துவரம் பருப்பு (Toor dal) 250 கிராம்
2.கோங்குரா இலைகள் 500 கிராம்
3.நசுக்கிய பூண்டு 30 கிராம்
4.நறுக்கிய வெங்காயம் 30 கிராம்
5.சீரகம் 3 டீஸ்பூன்
6.மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
7.நறுக்கிய பச்சை மிளகாய் 10
8.காய்ந்த சிவப்பு மிளகாய் 6
9.நெய் 100 கிராம்
10.கடுகு 2 டீஸ்பூன்
11.கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
12.உப்பு 1½ டீஸ்பூன்
13.தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:
கோங்குரா இலைகளை கழுவி, நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு 'ப்ளான்ச்' பண்ணி வைத்துக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். பின் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். அதனுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு 'ப்ளான்ச்' பண்ணி வைத்துள்ள கோங்குரா இலைகள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் குக்கரில் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதனுடன் பருப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் வரும்வரை, வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் குக்கரை திறந்து, பருப்பு, கீரை அனைத்தும் ஒன்று சேரும்படி கிளறி விடவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளித்து பருப்பில் கொட்டவும். கோங்குரா பப்பு தயார்.
டொமட்டோ பப்பு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வேகவைத்த துவரம் பருப்பு 1 கப்
2.பெரிய தக்காளி (நறுக்கியது) 3
3.காய்ந்த சிவப்பு மிளகாய் 3
4.பச்சை மிளகாய் 3
5.கறிவேப்பிலை ஒரு இணுக்கு
6.கடுகு ½ டீஸ்பூன்
7.சீரகம் ½ டீஸ்பூன்
8.பெருங்காயத் தூள் ½ டீஸ்பூன்
9.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
10.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
11.உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு
12.ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
செய்முறை:
துவரம் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். சூடானதும் அதில் கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பின் அதனுடன் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீரும் ஊற்றி தக்காளிப் பழத் துண்டுகளை மிருதுவாக வேகவிடவும்.
பிறகு பருப்பு, மற்றும் சரியான பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறு தீயில் கொதி வரும்வரை வைத்திருந்து இறக்கவும். கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
சூடான சாதத்தில் நெய் தாராளமாக ஊற்றி டொமட்டோ பப்புடன் பிசைந்து சாப்பிடவும். (அவரவர் தேவைக்கேற்ப உப்பு, காரம் கூட்டியோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.)