திரும்பத் திரும்ப சுவைக்கத் தூண்டும் அபார இனிப்பு ஆற்காடு மக்கன்பேடா!

Arcot Makkan Peda
Arcot Makkan PedaImg Credit: Cook Click N Devour
Published on

இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். திரும்பத் திரும்ப சுவைக்கத் தோன்றும். நாம் பலவகையான இனிப்புகளை அன்றாடம் சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு இனிப்பை நீங்கள் ஓரு முறை சுவைத்தால் போதும். அதை மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உடனே தோன்றும். இந்த எண்ணம் இந்த இனிப்பைச் சாப்பிடும் அனைவருக்குமே தோன்றும் என்பது அதிசயம். பொதுவாக இனிப்புகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சாப்பிட்டால் நமக்கு திகட்டி விடும். போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் இந்த இனிப்பை நீங்கள் சாப்பிட்டால் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்த இனிப்பு ஒரு குறிப்பிட்ட ஊரில் மட்டுமே கிடைக்கும். அப்படி என்ன பிரமாதமான இனிப்பு அது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த இனிப்பின் பெயர் ஆற்காடு மக்கன்பேடா.

திருநெல்வேலி என்றால் அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, திருப்பதி என்றால் லட்டு. அதுபோல ஆற்காடு என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது மக்கன்பேடா என்ற அபாரமான இனிப்பு. முந்தைய வேலூர் மாவட்டத்தில் இருந்த ஆற்காடு வேலூர் மாவட்டமானது பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது அமைந்துள்ளது.

என்னுடைய நண்பர்கள் ஆற்காட்டிற்குச் சென்றால் எனக்கு தவறாமல் வாங்கி வரும் இனிப்பு மக்கன்பேடா. பலமுறை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஆற்காட்டிலிருந்து பணி நிமித்தமாக பல நகரங்களில் வாழும் அன்பர்கள் தங்கள் நண்பர்களுக்குத் தவறாமல் வாங்கிச் சென்று தந்து மகிழும் ஒரு இனிப்பு மக்கன்பேடா.

நவாப்புகள் தங்கள் ஆட்சிக்காலத்தில் ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்காட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நவாப்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இனிப்பே ‘மக்கன் பேடா’ ஆகும். நவாப்புகள் தங்கள் விருந்தினர்களை உபசரிக்க இந்த இனிப்பைப் பரிமாறியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் மக்கன்பேடாவை ஊற வைக்க பனைவெல்லப் பாகு பயன்படுத்தப்பட்டது. தற்போது சர்க்கரைப் பாகு பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுவையான குடான்னம் - ரவா பாயசம் செய்யலாம் வாங்க!
Arcot Makkan Peda

உருதுமொழியில் 'மக்கன்' என்றால் 'நயம்' என்று பொருள். 'பேடா' என்றால் பாகில் ஊற வைக்கும் ஒரு வகை 'இனிப்பு' என்றும் பொருள். இந்த மக்கன்பேடாவை வாய்க்குள் போட்டால் அது நயமாக தொண்டைக்குழிக்குள் இறங்கிச் செல்லும் அற்புதமான சுவையோடு இருப்பதால் இதற்கு மக்கன்பேடா என்ற பெயர் ஏற்பட்டது.

சுமார் இருநூறு ஆண்டு காலத்திற்கு முன்னால் தயாரிக்கப்பட்டு இன்றளவும் பிரபலமாக உள்ள ஒரு இனிப்பு ஆற்காடு மக்கன்பேடா. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்த இனிப்பை ஒரு மூங்கில் கூடைக்குள் டிரேஸ் பேப்பரை வைத்து அதில் இந்த இனிப்பை பார்சலாகத் தந்த வழக்கம் இருந்தது. பார்ப்பதற்கு குலோப்ஜாமூனைப் போல இருந்தாலும் இதன் சுவை அலாதியானது. இதற்குள் முந்திரி, திராட்சை, பூசணி விதை, வெள்ளரி விதை போன்ற உலர் பழங்கள் இந்த இனிப்பின் சுவையினை பன்மடங்கு கூட்டும் ஆற்றல் வாய்ந்தது.

இதையும் படியுங்கள்:
Pasta Fagioli: அட்டகாசமான ஒரு இத்தாலியன் ரெசிபி!
Arcot Makkan Peda

மைதா மற்றும் சர்க்கரை கலக்காத கோவாவை சம அளவு கலந்து ஏலக்காய்ப் பொடி மற்றும் சோடாமாவைக் கலந்து நெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். ஒரு எலுமிச்சை அளவிற்கு உருண்டையாக உருட்டி அதற்குள் முந்திரி, திராட்சை, பாதம்பருப்பு, பேரிச்சம்பழம், முதலானவற்றைத் சிறுசிறு துண்டுகளாக்கி உருண்டைக்குள் பூரணம் போல வைத்து உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொறிக்கவேண்டும். பின்பு அவற்றை காய்ச்சிய சர்க்கரை பாகில் போட்டு சுமார் ஐந்து மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். இப்போது சுவையான மக்கன்பேடா தயார்.

நீங்கள் ஆற்காடு வழியாகச் செல்லும் போது அங்கு ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மக்கன்பேடாவை தவறாமல் வாங்கிச் சுவையுங்கள். ஒரு முறை சுவைத்தால் போதும். மீண்டும் மீண்டும் மக்கன்பேடாவை வாங்கிச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் தவறாமல் தோன்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com