தற்போது இளைஞர்கள் மத்தியில் தென்கொரியா மோகம் அதிகரித்துவிட்டது. அதுவும் தென்கொரிய டிராமக்களுக்கு ஒரு தனி விசிறிகள் கூட்டமேயிருக்கிறது. அந்த டிராமாக்களில் காட்டப்படும் உடைகள், அழகு சாதனப்பொருட்கள், உணவு வகைகளை ஆகியவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணமும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அதனால் தற்போது தென்கொரிய உணவு வகைகள் இந்தியாவிலும் முக்கியமாக தமிழ்நாட்டிலும் அதிகரித்துவிட்டன. அந்த உணவுகள் விற்கும் கடைகளும் பெரிய நகரங்களில் முளைத்துவிட்டன. இன்றைக்கு தென்கொரியாவில் மிகவும் பிரபலமான உண்ணப்படும் ஸ்நாக்ஸ் வகைகள் என்னென்ன என்பதை பற்றிதான் காண உள்ளோம்.
1.யாக்வா(Yakgwa)
தென் கொரியாவின் பாரம்பரியமான ஸ்நாக்ஸ் வகையில் யாக்வாவும் ஒன்றாகும். கோதுமை, தேன், எள் எண்ணெய், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தி பொரித்தெடுக்கப்படும் பிஸ்கட் வகையை சேர்ந்தது. இதை காபி அல்லது டீயுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இதில் இஞ்சி, கிராம்பு ஆகியவை சேர்க்கப்படுவதால் சில உடல் உபாதைகளையும் சரி செய்யும். இதை கொரியர்கள் தேன் பிஸ்கட் என்றும் அழைப்பார்கள்.
2.சாங்பியான்(Songpyeon)
சாங்பியான், கொரியாவில் அரிசி மாவில் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகையாகும். இது பார்ப்பதற்கு அரை நிலா வடிவத்திலிருக்கும். இதன் உள்ளே வைப்பதற்கு இனிப்பான எள், சிவப்பு பீன் பேஸ்ட் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இது தென்கொரியாவின் அறுவடை விழாவிற்காக மிகவும் பாரம்பரியமாக செய்யப்படும் உணவு வகையாகும்.
3.டல்கோனா(Dalgona)
‘ஸ்குவிட் கேம்’ என்னும் பிரபலமான கொரியன் சீரிஸை பார்த்தவர்களுக்கு இது என்னவென்று தெரியும். இது தென் கொரியாவில் பிரபலமான மிட்டாயாகும். சக்கரை மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடாவை பயன்படுத்தி செய்யக்கூடியது. இந்த மிட்டாயில் கொடுக்கப்பட்டிருக்கும் வடிவத்தை கவனமாக உடைக்காமல் மிட்டாயிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.
4. டிரை ஸ்குவிட்(Dry Squid)
ஸ்குவிட் சாப்பிட விரும்பமுள்ளவர்கள் கண்டிப்பாக இந்த ஸ்நேக்ஸையும் சாப்பிட விரும்புவார்கள். இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இந்த டிரை ஸ்குவிட்டை பொரித்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது பிரமாதமான சுவையாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
5.சீவீட் கிரிஸ்ப்(Seaweed crisp)
‘சீவீட்’ என்பது கடலிலிருந்து கிடைக்கப்படும் ஒருவகை ஆல்கே தாவரமாகும். இது கடல் மட்டுமில்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களிலும் வளரக்கூடியதாகும். இதில் எள் எண்ணெய், உப்பு, சோயா பீன், சோளமாவு போன்றவை பயன்படுத்தி நன்றாக வறுத்தெடுக்கப்படும் ஸ்நாக்ஸ் ஆகும்.
ரேமன் நூடுல்ஸ்( Ramen noodles)
1960ல் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நூடுல்ஸ் அங்கே மிகவும் பிரபலமான உணவு வகையாகும். முன்பே சமைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டிருக்கும். அத்துடன் டாப்பிங், மசாலாக்கள் உள்ளேயே இருக்கும். இதை அதிக நாட்கள் சேமித்து வைத்து கொள்ளலாம். இது மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் ஆகும். அதிலும் கிமிச்சி நூடுல்ஸ் கொரியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகும்.